பணி நிறைவு சான்று விண்ணப்பம்; வாங்கவே மறுக்கும் உள்ளாட்சிகள்; வீடு வாங்குவோர் தவிப்பு
சென்னை : குடியிருப்பு கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் கோரும் விண்ணப்பங்களை பெற மாநகராட்சி, நகராட்சிகள் மறுப்பதால், வீடு விற்பனை பாதிக்கப்படுகிறது என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில் பொது கட்டட விதிகள், 2019ல் அமலுக்கு வந்தன. இதன்படி, மூன்று வீடுகளுக்கு மேற்பட்ட குடியிருப்பு திட்டங்களுக்கு, பணி நிறைவு சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன்படி, கட்டுமான பணிகளை முடித்தவர்கள், முறையாக விண்ணப்பித்தாலும், அவர்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் கிடைப்பதில்லை. அதனால், மின்சாரம், குடிநீர் போன்ற இணைப்புகள் பெற முடியாமல் மக்கள் தவித்தனர். இதைத் தொடர்ந்து, மக்களின் கோரிக்கையை ஏற்று, 8,000 சதுர அடி வரையிலான கட்டடங்களில், எட்டு வீடுகள் வரை கட்டும்போது, பணி நிறைவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதற்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு மட்டும், பணி நிறைவு சான்று பெறுவது கட்டாயம். பிரச்னை
இதன் அடிப்படையில், கட்டுமான நிறுவனங்கள், பணி நிறைவு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், பெரும்பாலான மாநகராட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், மின்சார, குடிநீர் இணைப்புகள் பெற முடிவதில்லை. பணம் செலுத்திய மக்களுக்கு வீடுகளை ஒப்படைப்பதிலும் பிரச்னை ஏற்படுகிறது.இதுகுறித்து, இந்திய கட்டுமான வல்லுநர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:ஒரு கட்டடம் விதிகளுக்கு உட்பட்டு, முறையாக கட்டப்பட்டுள்ளதா என்று பார்த்து, கட்டட பணி நிறைவு சான்றிதழ் அளிக்க வேண்டியது, உள்ளாட்சி அதிகாரிகளின் பொறுப்பு. வீடு வாங்கும் பெரும்பாலான மக்கள், இதை கவனமாக கேட்க துவங்கி உள்ளனர். வீட்டுக்கடன் வழங்கும் வங்கிகளும், பணி நிறைவு சான்றிதழை காட்டினால் மட்டுமே, இறுதி தவணை தொகையை விடுவிக்கின்றன. இந்நிலையில், பணி நிறைவு சான்றிதழுக்காக, உள்ளாட்சி அமைப்புகளை அணுகினால், துளியும் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை.பெரும்பாலான மாநகராட்சிகள், நகராட்சிகளில், அதிகாரிகள் இதற்கான விண்ணப்பங்களை வாங்கவே மறுக்கின்றனர். இதனால், கட்டுமான பணிகள் முடித்த வீடுகளை, ஒப்படைக்க முடியாமல், தவிக்கும் நிலை ஏற்படுகிறது. நடவடிக்கை
மேலும், ரியல் எஸ்டேட் ஆணையத்திலும், பணி நிறைவு சான்று விபரங்களை அளிக்க வேண்டியிருப்பதால், வீடு விற்பனையில் பிரச்னை ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரி கள், இவ்விவகாரத்தில் தலையிட்டு, விரைவாக பணி நிறைவு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.