உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் மறுவாய்ப்பு வழங்க டி.ஆர்.பி., பரிசீலனை

 உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் மறுவாய்ப்பு வழங்க டி.ஆர்.பி., பரிசீலனை

சென்னை: உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் போது, சான்றிதழ்களை பதிவேற்ற முடியாதவர்களுக்கு, மறுவாய்ப்பு வழங்குவது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த அக்., 16ல் அறிவிப்பு வெளியிட்டது.

கோரிக்கை

தேர்வு வரும், 27ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, அக்., 17 முதல் நவ.,10ம் தேதி வரை நடந்தது. 50,000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாளில், தொழில்நுட்ப கோளாறால், பதிவு எண் பெற்றவர்களால், அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க முடியாமல் போனது. அதன்பின், அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் கால நீட்டிப்பு வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட ஏழு பேர் நீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர்களின் அசல் சான்றிதழ்களை நேரடியாக ஏற்றுக்கொள்ள, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவை வைத்து, மேலும் 15 பேர், நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், 22 பேர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில், தங்களின் அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்து வருகின்றனர். இதேபோல, தொழில்நுட்ப கோளாறால் சான்றிதழ்களை சமர்ப்பிக்க முடியாதவர்களின் விண்ணப்பங்களையும், ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என, விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தகவல்

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் போது, தொழில்நுட்ப கோளாறால், சான்றிதழ்களை சமர்ப்பிக்க முடியாமல், 700க்கும் அதிகமானோர் தவித்தனர். 'அதில், 22 பேர் நீதிமன்றத்தை நாடி உத்தரவை பெற்று சான்றிதழை சமர்ப்பித்து வருகின்றனர். நீதிமன்றம் செல்லாதவர்களுக்கும் இந்த சலுகைகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்க வேண்டும்' என்றனர். விண்ணப்பதாரர்களின் கோரிக்கை தொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி