சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகள் விரிவாக்கத்தால், கட்டுமான திட்ட அனுமதி, முழுமை திட்டங்கள் தயாரிப்பு, நகர்ப்புற திட்டமிடல் ஆகிய பணிகளுக்கு வல்லுனர்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி.,யில் தற்போது உள்ள பணியிடங்கள் போதுமானதாக இல்லை. புதிய பணியிடங்களை உருவாக்க தேவையான நிதியை வழங்க, அரசும் முன்வரவில்லை.இந்நிலையில், நாடு முழுதும் நகர்ப்புற திட்டமிடல் பணியின் தரத்தை மேம்படுத்த, மத்திய அரசு நிதி வழங்க முன் வந்தது. சிறப்பு திட்ட நிதி உதவி என்ற பெயரில், 1,300 கோடி ரூபாய் நிதி பெற, தமிழக வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறை முடிவு செய்தது.இதற்கு, மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகளின் ஒரு பகுதியாக, சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி.,யில், ஒப்பந்த அடிப்படையில் நகரமைப்பு வல்லுனர்கள் 38 பேர்நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில், சி.எம்.டி.ஏ., வுக்கு 13; டி.டி.சி.பி.,க்கு20; போக்குவரத்து, சுற்றுச்சூழல், புவியியல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளுக்கு தலா ஒருவர் என்ற ரீதியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பணியில் சேர, துறைகள் வாயிலாக அழைப்பு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.இது தவிர, 38 பேர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.