விதிமுறைகளால் மூடும் நிலையில் உள்ளதா ஆதிதிராவிடர் விடுதிகள்
மதுரை : அரசாணையை தவிர்த்து வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க அதிகாரிகள் உத்தரவிடுவதால் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகள் பலவற்றை மூடும் சூழல் உருவாகியுள்ளதாக மாணவர்கள், ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பள்ளி, கல்லுாரி விடுதிகள் செயல்படுகின்றன. இச்சமுதாயத்தினர் கல்வி பயில இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது. விண்ணப்பிக்கும் அனைவரையும் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டு, பல ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. புதிய நடைமுறை ஆனால் அரசாணைக்கு புறம்பாக அதிகாரிகளே வழிகாட்டு நெறிமுறையை உருவாக்கி, இந்தாண்டு அமல்படுத்தி வருவதாக மாணவர்கள், ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதன்படி விடுதியில் இருந்து 5 கி.மீ.,க்குள் உள்ள கிராம மாணவர்களை சேர்த்துக் கொள்வதில்லை. ஒரே வீட்டில் விடுதியில் தங்கும் இருவரில் ஒருவர் ஆண் எனில், அவருக்கு அனுமதியில்லை என்ற புதிய விதிமுறைகளை தெரிவித்துள்ளனர். இதனால் ஆதிதிரா விடர் நல விடுதிகள் பலவற்றில் மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஏற்கனவே படிக்கும் மாணவர்களையும் இவ்விதி பாதிப்பதால், இதுவரை தங்கிப்பயின்ற மாணவர்களும் வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. இவ்விதிகளால் மாணவர்கள் குறைந்தால் பல விடுதிகளை மூடும் நிலை வரும் என மாணவர்கள் புலம்புகின்றனர். விடுதியில் மாணவர்கள் இருப்பை பயோமெட்ரிக் கருவி மூலம் பதிவேற்றம் செய்து அதற்கேற்ப நிதி வழங்குகின்றனர். தற்போது இக்கருவிகள் சாட்டிலைட் தொடர்புடன் இணைக்கப்பட்டுள்ளது. சிலசமயம் இக்கருவி வருமான சான்று அடிப்படையில் அவர்கள் வீடு இருக்கும் துாரத்தை தவறாக காட்டுவதால் மாணவர்கள் வெளியேறும் வாய்ப்பு உள்ளது. இத்துறை ஊழியர் ஒருவர் கூறியதாவது: புதிய வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றும்படி கட்டயாயப்படுத்துகின்றனர். 5 கி.மீ., துாரம் என்பதை ஏன் வலியுறுத்த வேண்டும். இதனால் இச்சமுதாயத்தினருக்கு மேலும் பின்னடைவு ஏற்படும். மாணவர்கள் வருகை குறையும்போது மதுரையில் 15, தேனியில் 20, சிவகங்கையில் 17, விருதுநகரில் 32 விடுதிகள் மூடும் சூழல் உருவாகியுள்ளது. அரசு சமூகநீதியை பின்பற்றினால், விண்ணப்பிக்கும் எல்லோருக்கும் இடமளிக்க வேண்டும். பயோமெட்ரிக் குளறுபடிகளை களைய வேண்டும். பள்ளியில் அனைவருக்கும் பாகுபாடின்றி உணவு வழங்குவது போல இங்கும் வழங்க வேண்டும். ஏற்கனவே உள்ள அரசாணைப்படி செயல்படுவதை கண்காணிக்க வேண்டும் என்றார்.