உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ரூ.12.33 கோடி சொத்துக்கள் முடக்கம்

 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ரூ.12.33 கோடி சொத்துக்கள் முடக்கம்

சென்னை: போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஆறு பேரின், 12.33 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளதாக, என்.சி.பி., என்ற, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன் தெரிவித்துள்ளார். கோகைன் இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, 2,344 கிலோ கஞ்சா மற்றும் 7.618 கிலோ கோகைன் உட்பட, 11,725 கிலோ சிந்தட்டிக் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவற்றின் மதிப்பு, 64 கோடி ரூபாய். போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்பாக, 46 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நான்கு பேரை, சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் உதவியுடன் கைது செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து தான், 7.618 கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தல் கும்பல் தொடர்பாக விசாரித்து, ஆறு பேரின், 12.33 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன. ஆறு பேரில், ஒருவர் துபாயில் இருந்து, ஹவாலா பணப்பரிமாற்ற கும்பல்களை இயக்கும் நபராக செயல்பட்டு வந்துள்ளார். முடக்கப்பட்ட சொத்துக்களில் அவருக்கு சொந்தமானது மட்டும், 2 கோடி ரூபாய். சிறை தண்டனை போதைப் பொருள் கடத்தல் தொடர்பான, 15 வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. அவற்றில், 11 வழக்குகளில் கைதான நபர்களுக்கு, 10 - 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றுத் தரப்பட்டு உள்ளது. மேலும், சிறை தண்டனை பெற்றவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்து வருகிறோம். அந்த வகையில், 1.20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட, 4,314 கிலோ போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன. ஜனவரியில், 7.185 கிலோ போதைப் பொருட்களை அழிக்க உள்ளோம். போதைப் பொருள் கடத்தல்கள், 'டார்க்நெட்' எனும் இணையதள சேவையை பயன் படுத்தி தான் அதிகம் நடக்கின்றன. அவற்றில், நான்கு இணையதளத்தை முடக்கி உள்ளோம். தமிழக காவல் துறை, சிறைத் துறை மற்றும் தமிழக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து, கடத்தலில் ஈடுபட்ட எட்டு பேரை நாடு கடத்தியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி