உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டி.ஜி.பி., சுற்றறிக்கைக்கு வக்கீல்கள் எதிர்ப்பு திரும்ப பெற வலியுறுத்தி சங்கம் கடிதம்

டி.ஜி.பி., சுற்றறிக்கைக்கு வக்கீல்கள் எதிர்ப்பு திரும்ப பெற வலியுறுத்தி சங்கம் கடிதம்

சென்னை:'சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகளை சந்தித்து, சதித் திட்டம், கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவதாக, டி.ஜி.பி., வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சந்தேகம்

போலீஸ் கமிஷனர்கள், ஐ.ஜி.,- - டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி.,க்களுக்கு, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 'கடந்த ஜன., 1ல் இருந்து ஜூலை 20 வரை, தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 84 ரவுடிகளை, 396 வழக்கறிஞர்கள் 1,987 முறை சந்தித்துள்ளனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 15 ரவுடிகளை மட்டும், 546 முறை சந்தித்துள்ளனர். 'வழக்கு தொடர்பாக, கைதிகளை வழக்கறிஞர்கள் சந்தித்தாலும், சிலரின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக உள்ளன' என்று கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கைக்கு, வழக்கறிஞர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.அத்துடன், சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலர் ஆர்.கிருஷ்ணகுமார் ஆகியோர், டி.ஜி.பி.,க்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

நற்பெயருக்கு களங்கம்

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:ஒட்டுமொத்த வழக்கறிஞர்கள் சமூகத்தின் மீது தேவையற்ற அவதுாறுகளையும், பொத்தாம் பொதுவாக குற்றஞ்சாட்டி வழக்கறிஞர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் சுற்றறிக்கை உள்ளது.வழக்கில் தொடர்புடைய தன் கட்சிக்காரர்களை சந்திக்க, வழக்கறிஞர்களுக்கு உரிமை உள்ளது. அந்த உரிமையை பறிக்கும் வகையில் காவல் துறை செயல்படுவது, நீதி பரிபாலனத்துக்கு எதிரானது.ஒட்டுமொத்த வழக்கறிஞர்கள் சமுதாயத்தையும் சந்தேக கண்ணோட்டத்துடன் காவல் துறை அணுகினால், அது நீதித்துறை மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய்யும். சிறையில் கைதிகளை சந்திக்கும் வழக்கறிஞர்கள், கட்டப்பஞ்சாயத்து, சதித் திட்டத்தில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி, டி.ஜி.பி., வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R.RAMACHANDRAN
அக் 19, 2024 13:55

நீதி துறை நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞ்சர்கள் ஆளுக்கு தகுந்தாற் போல நீதி வழங்குதல் மற்றும் பணம் தரும் குற்றவாளிகளை காப்பாற்றும் விதத்தில் வழக்குகள் நடத்துதல் போன்ற செயல்களால் எப்போது பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. இவர்கள் காவல் துறை தொடரும் பொய் வழக்குகளுக்கும் உடந்தையாக உள்ளனர்.வாய்மையே வெல்லும் என்பது பொய்மையே வெல்லும் என மாறிவிட்டது இவர்களால். அதனால் தான் நியாயம் செத்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டது என்ற சொலவடை எப்போதிருந்தே இருக்கிறது இந்நாட்டில்.


சம்பா
அக் 19, 2024 11:04

எல்லாரும் நல்லவர்கள்


முக்கிய வீடியோ