| ADDED : டிச 05, 2025 07:15 AM
சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை: தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 50 சதவீதத்திற்கும் அதிகமான வேட்டி, சேலைகள் வெளி மாநிலங்களில் இருந்து முறைகேடாக வாங்கப்படுவதால், விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழந்து அவதியுறும் நிலைக்கு, தி.மு.க., அரசு தள்ளி உள்ளது. கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு சங்கங்களை முடக்கும் எண்ணத்துடன், தரமற்ற நுாலை வழங்கி, அவர்கள் மீதே பழிபோடும் முயற்சியில், கைத்தறித் துறை ஈடுபடுவதாக, நெசவுத்தொழிலாளர்கள் புகார் கூறுகின்றனர். வரும் 2026ல், இலவச வேட்டி நெய்ய, கூட்டுறவு நுாற்பாலைகளில் இருந்து தரமற்ற பாவு நுாலை வழங்கியதாக, கைத்தறி மற்றும் விசைத்தறி சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாதவாறு, கைத்தறியில் நான்கு லட்சம் வேட்டிகளிலும், விசைத்தறியில் 13 லட்சம் வேட்டிகளிலும் நுாலின் தன்மை மாறியுள்ளதாக கூறி, சங்கங்களுக்கே திருப்பி அனுப்ப தி.மு.க., அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் சங்கங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விடும். இது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, அனைத்து வேட்டிகளையும் மறு தரப்பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.