5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பாரம்பரியமான கோவில்பட்டி கடலைமிட்டாய், உடன்குடி கருப்பட்டி, ஆத்துார் வெற்றிலை ஆகியவற்றிற்கு இதுவரை புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.இந்நிலையில், துாத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பில், திருச்செந்துார் பகுதியில் விளையும் பூவிழாஞ்செண்டு வாழைப்பழம், அம்மன்புரம் மொந்தன் வாழை, கருங்கண்ணி பருத்தி, உணவுப் பொருட்களான காயல்பட்டினம் தம்மடை, கடம்பூர் போளி ஆகிய ஐந்து பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க வழிவகை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.துாத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் புவிசார் குறியீடு பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது. புவிசார் குறியீடு விண்ணப்ப தொடர்பு அதிகாரி சஞ்சய் காந்தி கூறியதாவது:தமிழகத்தில் இதுவரை 60 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. 30 பொருட்களுக்கான விண்ணப்பம் நிலுவையில் உள்ளது. புதிதாக 15 பொருட்களுக்கு விண்ணபிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. துாத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்று தண்ணீர் ஈரப்பதத்தில் விளையும் மொந்தன் வாழை, பூவிழாஞ்செண்டு வாழை தனி சிறப்பு வாய்ந்தவை. கடல் காற்று கலந்து குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டுமே விளையக்கூடிய கருங்கண்ணி பருத்தியில் இருந்து எடுக்கப்படும் நுால் சிறப்பு வாய்ந்தது.கடம்பூர் போளி, காயல்பட்டினம் தம்மடை ஆகிய உணவுப் பொருட்கள் பூர்வீகமாக தயாரிக்கப்படும், தனிச்சுவை உணவுப்பொருட்கள். தற்போது, ஐந்து பொருட்களுக்கும் புவிசார் குறியீடு கிடைக்க முதல்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.