உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலியல் வன்முறை வழக்கு இன்ஸ்பெக்டருக்கு ஜாமின்

பாலியல் வன்முறை வழக்கு இன்ஸ்பெக்டருக்கு ஜாமின்

சென்னை:சிறுமி பாலியல் வன்முறை வழக்கில், 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் வழங்கி உள்ளது.சென்னை, வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த பெண் அளித்த புகாரில், தன் மகளை பாலியல் தொழிலில் உறவினர்கள் ஈடுபடுத்தியதாக கூறியிருந்தார். சிறுமியின் உறவினர்கள், எண்ணுார் இன்ஸ்பெக்டராக இருந்த புகழேந்தி உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், 22 பேர் கைது செய்யப்பட்டனர்; 4 பேர் தலைமறைவாகினர்.வழக்கு நிலுவையில் இருக்கும்போது, ஒருவர் இறந்தார். ஆறு பெண்கள், சிறுமியின் உறவினர்கள் என, 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பா.ஜ., பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட 13 பேருக்கு, தலா 20 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து, நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது.தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில், புகழேந்தி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. புகழேந்தி சார்பில், வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜராகி, ''பாதிக்கப்பட்ட சிறுமி, மனுதாரர் புகழேந்தியை அடையாளம் காட்டவில்லை. குறுக்கு விசாரணையின்போது, நீதிபதி கேள்விகள் எழுப்பியதை தொடர்ந்து, மனுதாரரின் பெயரை சிறுமி குறிப்பிட்டார்,'' என்றார்.இருதரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:அரசு தரப்பு சாட்சியத்தில் இருந்து, நீதிமன்றத்தில் மனுதாரரை அடையாளம் காட்ட முடியாதது தெரிகிறது. மனுதாரர், 2020 நவம்பரில் இருந்து, சிறையில் உள்ளார். மேல்முறையீட்டு வழக்கு, தற்போது விசாரணைக்கு வரக்கூடியதாக இல்லை. எனவே, மனுதாரருக்கு விதித்த தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது. மேல்முறையீட்டு வழக்கு விசாரணை முடியும் வரை, மாதத்தின் முதல் வேலை நாள் அன்று, விசாரணை நீதிமன்றத்தில் மனுதாரர் ஆஜராக வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை