சென்னை: 'கோவில்களில் பக்தர்கள், கேமராவுடன் கூடிய மூக்கு கண்ணாடி அணிந்து வருவதை, தடை செய்ய வேண்டும்' என, 'பகவத் ராமாநுஜ ஸம்ப்ரதாய ஸபா' கோரிக்கை விடுத்துள்ளது. அதன் தலைமை நிர்வாக அதிகாரி அமெரிக்கை நாராயணன், ஹிந்து சமய அறநிலையத்துறை செயலருக்கு அனுப்பி உள்ள, மனுவில் கூறியிருப்பதாவது: சமீப காலமாக, பக்தர்கள் வீடியோ பதிவு செய்யக்கூடிய, கேமரா பொருத்தப்பட்ட கண்ணாடிகளை அணிந்து வருகின்றனர். இது கோவிலின் புனிதச் சூழலையும், அமைதியையும் பாதிக்கும் அபாயம் கொண்டவை. பக்தர்கள் அறியாமல், அந்த கண்ணாடியில் அர்ச்சகர்கள், வழிபாட்டு முறைகள் போன்றவற்றை பதிவு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்துகின்றனர். இது கோவில்களின் ஆசாரம், மரபு, வழிபாட்டு ஒழுக்கத்திற்கு முரணானவை. எதிர்காலத்தில் சட்ட, சமூக, நிர்வாக சிக்கல்களை உருவாக்கக் கூடியவை. எனவே, தமிழகம் முழுதும், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களுக்கும், ஸ்மார்ட் கிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மூக்கு கண்ணாடி போன்றவற்றை அணிந்து, கோவிலுக்குள் நுழைவதை தடை செய்ய வேண்டும். இதற்கு ஒரே மாதிரியான சுற்றறிக்கையை வெளியிட வேண்டும். இத்தகைய அறிவுறுத்தல், கோவில்களின் புனிதத் தன்மையை பாதுகாக்கவும், பக்தர்களின் தனியுரிமையை உறுதி செய்யவும், சம்பிரதாய ஒழுக்கத்தை நிலை நாட்டவும், எதிர்காலத்தில் நிகழக்கூடிய பிரச்னைகளை, முன்கூட்டியே தவிர்க்கவும், மிக அவசியமான நடவடிக்கையாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.