பேண்டேஜ் தயாரிப்பு; விசைத்தறிகள் வேலைநிறுத்தம்
ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த சத்திரப்பட்டியில் கூலி உயர்வு கோரி பாண்டேஜ் உற்பத்தி செய்யும் சிறு விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளனர். சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் சுற்றுப்பகுதிகளில் மருத்துவ துணியான பேண்டேஜ் தயாரிப்பு பிரதான தொழிலாக நடக்கிறது. இதை சார்ந்த தொழில்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். உற்பத்தியாளர்களிடம் மூலப் பொருட்கள் பெற்று கூலி அடிப்படையில் தொழிலாளர்களுக்கு வேலை தரும் சிறு விசைத்தறி உரிமையாளர்கள் 350 பேரும் இதனை நம்பி 2 ஆயிரம் தொழிலாளர்களும் உள்ளனர். மருத்துவ துணி உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் 3 ஆண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்படும். 2022ம் ஆண்டுக்குப்பின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. இதையடுத்து கூலி உயர்வு வழங்க கோரி நேற்று முதல் சிறு விதைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கி உள்ளனர். சிறு விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் குருசாமி கூறியது: உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் தொழிலாளர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு வழங்கி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.விசைத்தறி கூடத்தில் பணி புரியும் மேஸ்திரி, லோடுமேன், ஆயிலர், வைண்டர், பாவு வாங்குபவர் ஆகியோருக்கும் 7.25 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும். மின் கட்டணம், உதிரிபாகங்கள், பராமரிப்பு செலவு, வாடகை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது 16 ஊடை கொண்ட ஒரு மீட்டர் மருத்துவ துணிக்கு ரூ 1.87 காசு கூலி வழங்கப்படுகிறது. முதல் ஆண்டுக்கு நாங்கள் 18 காசு கேட்கிறோம். ஆனால் பதில் 12 காசு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 12 காசுக்கு பதில் 8 காசு மட்டும் வழங்க முன் வந்துள்ளனர். எனவே கால வரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளோம். என்றார்.