உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 70வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை

70வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பவானிசாகர் : மூன்று மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்கும், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை, 70வது ஆண்டில் நாளை (ஆக.,19) அடியெடுத்து வைக்கிறது.தமிழகத்தில் தஞ்சை டெல்டா பாசனத்துக்கு அடுத்து மிகப்பெரிய பாசனப்பரப்பு, தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையை பெற்றது பவானிசாகர் அணை. ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில், 2.47 லட்சம் ஏக்கர் நிலங்கள் அணை மூலம் பாசனம் பெறுகின்றன. அணை கரையின் நீளம், 8.78 கி.மீ., கீழ்பவானி பிரதான கால்வாயின் நீளம், 200 கி.மீ., பிரதான கால்வாயிலிருந்து, 800 கி.மீ., நீளத்துக்கு கிளை வாய்க்கால், 1,900 கி.மீ., நீளத்துக்கு பகிர்மான வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரம், 105 அடி.

இங்கிலாந்து இயந்திரங்கள்

பவானி ஆறு, மாயாறு சேருமிடத்தில், 10.50 கோடி ரூபாய் மதிப்பில், பவானிசாகர் அணை கட்டும் பணி, 1948ல் தொடங்கப்பட்டது. தொழில் நுட்ப இயந்திரங்கள், இங்கிலாந்து நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டன. ஏழாண்டுகள் நடந்த பணி முடிந்து, 1955 ஆக.,19ல் அப்போதைய சென்னை மாகாண முதல்வர் காமராஜர், அணையை திறந்து வைத்தார்.வரலாற்று பெருமை வாய்ந்த பவானிசாகர் அணை நாளை, 70வது ஆண்டில் கம்பீரமாக அடியெடுத்து வைக்கிறது. இன்று அணை நீர்மட்டம், 96.77அடி; நீர் இருப்பு 26.27 டி.எம்.சி.,யாக இருந்தது.

16 மெகாவாட் மின்னுற்பத்தி

அணையில் ஆற்று மதகுகள் ஒன்பது, கீழ்பவானி வாய்க்கால் மதகுகள் மூன்று, உபரி நீர் 'ஸ்பில்-வே' மதகுகள் ஒன்பது என, 21 மதகுகள் உள்ளன. இதில் பவானி ஆற்று மதகுகளில் வெளியேற்றப்படும் நீரில், 8 மெகாவாட் மின்சாரம், கீழ்பவானி வாய்க்காலில், 8 மெகாவாட் மின்சாரம் என, 16 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதுவரை 22 முறை 'புல்'

பவானிசாகர் அணை, 1955ல் திறக்கப்பட்ட நிலையில், 1957ல் முதல் முறையாக, முழு கொள்ளளவை எட்டியது. அதன்பின், 1958, 59, 60, 61, 62 என, தொடர்ச்சியாக ஆறு முறை நிரம்பியது. பின், 2005, 2006, 2007ல் முழு கொள்ளளவை எட்டியது. இதன் பின், 2018 முதல் 2022 வரை ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக அணைை நிரம்பியது. இறுதியாக, 2022 ஆக.,5ம் தேதி அணை நீர்மட்டம், 102 அடியை தொட்டது. அதன் பிறகு அணை நிரம்பவில்லை. மொத்தத்தில் அணை கட்டப்பட்ட, 70 ஆண்டுகளில், 22 முறை அணை நிரம்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

M Selvaraaj Prabu
ஆக 18, 2024 21:43

சமீபத்தில் பவானி சாகர் அணைக்கு போயிருந்தேன். கார் நிறுத்த 50 ரூபாய் கட்டணம். நுழைவு சீட்டு 5 ரூபாய். அணையை சுற்றி இருக்கும் பூங்கா மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. பராமரிப்பே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். தண்ணீர் படிப்படியாக செல்வது போல் ஒரு அமைப்பு இருக்கிறது. அதில் ஓடும் தண்ணீர் சாக்கடை போல இருக்கிறது. நீரூற்று இருக்கும் இடம் பாதி சாக்கடை போல் இருக்கிறது. அதில் படகு சவாரி வேறு. ஆவின் டீக்கடையில் டீ 15 ரூபாய். பேப்பர் கப்பில் முக்கால் வாசி கொடுக்கிறார்கள். டீ மிகவும் சுமாராக இருக்கிறது. இந்த அணையை மிகவும் நன்றாக பராமரிக்கலாம். ஏன் அரசாங்க அதிகாரிகள் இப்படி இருக்கிறார்களோ தெரிய வில்லை. மிகவும் வருத்தமாக இருக்கிறது. மாதா மாதம் சம்பளம் சரியாக வாங்குகிறார்களே பிறகு ஏன் இப்படி பொறுப்பின்றி இருக்கிறார்கள்? அதே சமயம் இன்று 18 ஜூலை மலம்புழா அணைக்கு சென்றிருந்தேன். 100 க்கு 100 மார்க். 5 ஸ்டார் கொடுக்கலாம். தயவு செய்து பவானி சாகர் அணையை பராமரிக்கும் அதிகாரிகளும், துப்புரவு தொழிலாளிகளும், மலம்புழா அணைக்கு ஒரு முறை வந்து ஒரு அணையை எப்படி வைத்திருப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.


அப்புசாமி
ஆக 19, 2024 11:28

இந்த அணை திருட்டு திராவிடர்களால் பராமரிக்கப் படுகிறது. இஷ்டமிருந்தால் வா. இல்லாங்காட்டி போய்க்கினே இரு.


Subramanian
ஆக 18, 2024 19:30

அந்த கால ஆட்சி பொற்கால ஆட்சி


sundarsvpr
ஆக 18, 2024 18:53

இறைக்கிற தூர் வாரிய கிணறுகளில் நீர் ஊரும். நீர் சுத்தமாகவும் சுவையாய் இருக்கும். இதுபோல் எல்லா நீர் நிலைகளும் தூர் வாரப்படவேண்டும் இதனை காலத்தில் செய்யவேண்டும். அணைகள் பாசனத்திற்கு மட்டும் அல்ல உபரி நீர் அணையை ஒட்டியுள்ள ஊர்களின் கணவாய் குளம் போன்றவைகள் நிரப்பவேண்டும் இதனால் வீட்டிலுள்ள கிணறுகளில் நீர் ஊரும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை