சென்னை: பீஹார் சட்டசபை தேர்தலில், நிதிஷ்குமார்-பாஜ தலைமையிலான தேஜ கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளனர்.முதல்வர் ஸ்டாலின்
கொளத்தூர் சட்டசபை தொகுதி திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர் கொளத்தூர் மக்களிடம் கோரிக்கை மனுக்களை ஸ்டாலின் பெற்றார். அப்போது நிருபர்கள் பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு, ''புல்லா வரட்டும், புல்லா வரட்டும்'' என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.அதிமுக பொதுச்செயலாளர், இபிஎஸ்
பீஹார் மக்கள் இண்டி கூட்டணியின் பொய்களை புறந்தள்ளி இருக்கிறார்கள்.பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீஹார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு வாழ்த்துக்கள். மாநில வளர்ச்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதையே இந்த முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. பீஹார் சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு மிகவும் பொருத்தமான பதிலடியை கொடுத்துள்ளனர்.தமிழக பாஜ, தலைவர், நயினார் நாகேந்திரன்
பீஹார் தேர்தலில் 190 இடங்களுக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சி முன்னிலையில் உள்ளது, இது ஏற்கனவே அங்கு நடைபெற்றுள்ள ஆட்சிக்கு மீண்டும் பொதுமக்கள் அங்கீகாரத்தை வழங்கி உள்ளார்கள் என்பதை காட்டுகிறது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் கமிஷனோடு, பாஜ கூட்டணி வைத்துள்ளதாக தெரிவித்து வந்தனர். அவர்கள் வெற்றி பெற்றால் அதைப் பற்றி பேசுவதில்லை. இப்போது தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் இதுபோன்று பேசுவது வழக்கமாக வைத்துள்ளனர். தொடர்ந்து பாஜ பீஹார் தேர்தலில் அமோக வெற்றி பெற்றது, போல தமிழகத்திலும் பாஜ கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.