டவர் உதவியின்றி இனி போன் பேச உதவ விண்ணுக்கு சென்றது புளூபேர்ட் செயற்கைக்கோள்
சென்னை: ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை, 'பாகுபலி ராக்கெட்' என அழைக்கப்படும், எல்.வி.எம் - 3 ராக்கெட் வாயிலாக, அமெரிக்காவின் 6.1 டன் எடையுள்ள, 'புளூபேர்ட் பிளாக் 2' எனும் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இது குறித்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ' தலைவர் நாராயணன் அளித்த பேட்டி: பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையில், தற்போது, 'இஸ்ரோ' மற்றுமொரு சாதனையை படைத்து, இந்தியாவுக்கு பெருமையை சேர்த்து உள்ளது. அமெரிக்காவின் 'ஏ.எஸ்.டி.ஸ்பேஸ் மொபைல்' எனும் வணிக நிறுவனத்துக்கான, 'புளூபேர்ட் பிளாக் 2' எனும் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை, மிகத்துல்லியமாக புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தியுள்ளோம். இது, அமெரிக்காவின் முதல் வணிக ரீதியான செயற்கைக்கோள். இது, ஜி.எஸ்.எல்.வி., வகையைச் சேர்ந்த, எல்.வி.எம் - 3 ராக்கெட்டின் 9வது வெற்றி; ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும், 104வது செயற்கைக்கோள். கடந்த மாதம் 2ம் தேதி, எல்.வி.எம்., ஏவுகலத்தின் வாயிலாக செயற்கைக்கோளை ஏவிய நிலையில், 52 நாட்களுக்குள் அடுத்த செயற்கைக்கோளை ஏவி, இஸ்ரோ புதிய சாதனையை படைத்து உள்ளது. தற்போது, இந்திய மண்ணில் இருந்து ஏவப்பட்ட, மிகவும் அதிக எடையான 6,100 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சுமந்து சென்ற எல்.வி.எம் - 3 ராக்கெட்டை, 'பாகுபலி ராக்கெட்' என, அழைக்கிறோம். அதிக எடையுள்ள செயற்கைக்கோளை சுமந்து சென்றதால், பாகுபலி என குறிப்பிடுகிறோம். இந்த செயற்கைக்கோளை, 520 கி.மீ., புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 518.5 கி.மீ., புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தி உள்ளோம். இதுவரை உலகில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களில், இவ்வளவு துல்லியத்தன்மையை அடைந்ததில்லை என்பது, புதிய சாதனை. இது, சாதாரணமாக நிகழ்ந்ததில்லை. இதை அடைய, நம் குழு மிகக் கடுமையாக உழைத்தது. இதுவரை, 34 நாடுகளுக்காக, 433 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்ட நிலையில், இந்த 'புளூபேர்ட் பிளாக் 2' செயற்கைக்கோள், 434வதாக ஏவப்பட்டுள்ளது. இஸ்ரோ, வெளிநாடுகளுக்கான செயற்கைக்கோள்களை, கடந்த 1980 முதல் ஏவத் துவங்கி, கடந்த 45 ஆண்டுகளில் இந்த சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனைக்கு இடையில், ஒவ்வொரு ஏவுதலிலும் ஒவ்வொரு புதிய விஷயங்களை மாற்றியமைத்து, பாடம் கற்று வருகிறோம். கடந்த முறை பயன்படுத்திய, 'எலக்ட்ரோ ஹைட்ராலிக் ஆக்சிலேட்டர்' தொழில்நுட்பத்துக்கு மாற்றாக, இந்த முறை, 'எஸ் 200' திட மோட்டார் கட்டுப்பாடாக மாற்றி அமைத்து, வெற்றி பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.