உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  படகு ஆம்புலன்ஸ் சேவை: அரசு அனுமதிக்கு காத்திருப்பு

 படகு ஆம்புலன்ஸ் சேவை: அரசு அனுமதிக்கு காத்திருப்பு

சென்னை: தமிழகத்தில் வெள்ள பாதிப்பு நேரங்களில், கர்ப்பிணி, முதியோர் மற்றும் நோயாளிகளை பாதுகாப்பாக மீட்க, ' 108' ஆம்புலன்ஸ் சேவையில், படகு ஆம்புலன்சை இணைக்க, தமிழக அரசு ஒப்புதல் தர வேண்டும் என, மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் செயல்படும், '108 ஆம்புலன்ஸ்' சேவையை, இ.எம்.ஆர்.ஐ. கிரின் ஹெல்த் சர்வீசஸ் என்ற நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. தற்போது, 900க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருக்கும் நிலையில், மழை வெள்ள பாதிப்புகளின்போது, அவற்றை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவ்வாறான நேரங்களில், மீனவர்களின் படகுகள் வாயிலாக, கர்ப்பிணியர், முதிய நோயாளிகளை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்புகின்றனர். இந்த மீட்பு நடவடிக்கையின்போது உடனடி அவசரகால முதலுதவி சிகிச்சை வழங்க முடியாத நிலை நீடித்து வருகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவகாலங்களில், மழை வெள்ள பாதிப்பு ஏற்படுவதால், '108' ஆம்புலன்ஸ் நிர்வாகம், இரண்டு படகு ஆம்புலன்ஸ்களை கொள்முதல் செய்ய, தமிழக அரசிடம் அனுமதி கேட்டு, இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கிறது. ஆனால், அரசு நிதிநிலையை காரணம் காட்டி, தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, '108' ஆம்புலன்ஸ் சேவை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தின் சில பகுதிகளில், அவ்வப்போது வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. அந்நேரங்களில், தரைவழி வாகனங்களை பயன்படுத்த முடிவதில்லை. இதனால், இரண்டு படகு ஆம்புலன்சை, இச்சேவையில் இணைக்க, தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அசாம், குஜராத், ஒடிஷா போன்ற மாநிலங்களில், படகு ஆம்புலன்ஸ்கள் உள்ளன. தமிழகத்திலும் செயல்படுத்த, மீண்டும் அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். ஒரு ஆம்புலன்ஸ் கட்டமைப்புக்கு, 10 லட்சம் ரூபாய் செலவாகும். அரசு அனுமதி அளித்தால், விரைவில் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி