சுயசான்று அளித்த 9,009 பேருக்கு கட்டட அனுமதி: டி.டி.சி.பி., தகவல்
சென்னை:தமிழக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய சுயசான்று முறையில், இதுவரை 9,009 பேருக்கு உடனடி கட்டட அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக, நகர் மற்றும் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர். தமிழகத்தில், 10,000 சதுரடி வரையிலான கட்டடங்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ளது. இதில், குறைந்த பரப்பளவு வீடுகளுக்கு கட்டட அனுமதி பெறுவதில் பிரச்னை ஏற்பட்டது. அனுமதி ஆணை
இதற்கு தீர்வாக, 2,500 சதுரடி மனையில், 3,500 சதுரடி பரப்பளவுக்கு கட்டடங்கள் கட்ட சுயசான்று முறையில் ஒப்புதல் வழங்கும் திட்டம், ஜூலையில் துவக்கப்பட்டது. இதற்கு, சில ஆவணங்கள், வரைபடங்களை, பொது மக்கள் இணையதளம் வாயிலாக சமர்ப்பித்தால் போதும்.அதற்கான கட்டணத்தை செலுத்தியவுடன் கட்டட அனுமதிக்கான ஆணை, வரைபடம் ஆகியவை கிடைத்து விடும்.இதுகுறித்து, டி.டி.சி.பி., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது வரை சுயசான்று முறையில், 9,009 பேருக்கு உடனடியாக கட்டட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் சமர்ப்பித்து, கட்டணங்கள் செலுத்திய உடன் இவர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஊராட்சிகளில், 5,039; நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில், 2,883; பேரூராட்சிகளில், 954; சென்னை மாநகராட்சியில், 133 பேர் கட்டட அனுமதி பெற்றுள்ளனர். மக்களிடம் இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், தற்போதைய நிலவரப்படி 11,608 விண்ணப்பதாரர்கள், அடிப்படை ஆவணங்கள் பதிவிடும் நிலையில் உள்ளனர். காத்திருப்பு
மேலும், 4,989 விண்ணப்பதாரர்கள், இணையவழி ஆவண தாக்கல் முடிந்து, கட்டணம் செலுத்துவதற்காக காத்திருக்கின்றனர்.இதில் தற்போது, 3,500 சதுரடி கட்டடத்தின் உயரம் மற்றும் வீடுகளின் எண்ணிக்கை தொடர்பான கட்டுப்பாடுகளில் சிறிய தளர்வுகள் வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது. உயரத்தை அதிகரித்தால், அடித்தள வாகன நிறுத்தம் கட்டலாம் என, மக்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.