சென்னை: 'ஒப்பந்தத்தில் உறுதி அளித்த வசதிகள் இல்லாத வீட்டை, ஒப்படைப்பின்போது ஏற்க மறுக்கலாம்' என, ரியல் எஸ்டேட் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். வீடு, மனை விற்பனையில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், 2016ல் இயற்றப்பட்டது. இதை அமல்படுத்த, ரியல் எஸ்டேட் ஆணையம், தீர்ப்பாயம் ஆகியவை, மாநில அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளின் செயல்பாடுகளை, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் கண்காணித்து வருகிறது. தேவை அடிப்படையில் உரிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு பிறப்பித்து வருகிறது. இந்நிலையில், ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்க தவறும் நிறுவனங்கள் மீதான புகார்கள், இந்த ஆணையங்களுக்கு வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டு வருகிறது. ஆனால், இதில் ஒப்பந்தத்தில் உறுதி அளித்த வசதிகள் முழுமையாக இல்லாத வீட்டை ஒப்படைக்கும்போது, பணம் செலுத்தியவர் ஏற்க மறுப்பதற்கு வழி இல்லை. இதனால், வசதிகள் குறைந்த வீட்டை மக்கள் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட வழக்கை விசாரித்த மஹாராஷ்டிர ரியல் எஸ்டேட் ஆணையம், 'ஒப்பந்தத்தில் உறுதி அளித்தது போன்ற சிறப்பு வசதிகளை செய்யாத நிலையில், அந்த வீட்டை ஏற்க, பணம் செலுத்தியவர் மறுக்கலாம்' என, தீர்ப்பளித்துள்ளது. இதற்கு, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்பிரிவில் வழிவகை உள்ளதாக, அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை பிற மாநிலங்களில் உள்ள ஆணையங்களும் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து, ரியல் எஸ்டேட் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்த, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீடு விற்பனையில் சாத்தியமற்ற வாக்குறுதிகள் தருவதை தடுக்க கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில், ஒப்பந்தத்தில் உறுதி அளித்த வசதிகள் இல்லாவிட்டால், அந்த வீட்டை ஏற்க, பணம் செலுத்தியவர் மறுக்கலாம் என்பதும் உறுதி செய்யப்படும். இதனால், கட்டுமான நிறுவனங்கள் தங்களால் செய்து கொடுக்க முடியாத வசதிகள் குறித்த வாக்குறுதிகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். திரும்ப பெறலாம் ரியல் எஸ்டேட் சட்டப்படி, ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட நாளில் கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைக்காவிட்டால், அது குறித்து புகார் தெரிவிக்கலாம். இதுபோன்று தாமதம் செய்யப்படும் திட்டங்களில் இருந்து மக்கள் வெளியேற, சட்டப்படி அதிகாரம் உள்ளது. ரியல் எஸ்டேட் ஆணையம், பல்வேறு வழக்குகளில் இதை உறுதி செய்ததுடன், வெளியேறும் மக்கள் தாங்கள் செலுத்திய பணத்தையும், தாமத காலத்துக்கான இழப்பீட்டையும் பெற முடியும். இதேபோன்று, உறுதி அளித்த வசதிகளை செய்து கொடுக்காதது உண்மையானால், பணம் செலுத்தியவர் அதை ஏற்க மறுப்பதுடன், தான் செலுத்திய பணத்தை திரும்ப பெற உரிமை உள்ளதாக, ரியல் எஸ்டேட் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். ***