மதுரை டங்க்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்யுங்கள் * பிரதமருக்கு முதல்வர் கடிதம்
சென்னை:மதுரை மாவட்டத்தில், 'இந்துஸ்தான் ஜிங்க்' நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட, 'டங்க்ஸ்டன்' சுரங்க உரிமையை ரத்து செய்யுமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:மதுரை மாவட்டத்தில், டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க, மத்திய அரசு உரிமம் வழங்கியதால், அப்பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில், பிரதமர் மோடி தலையிட்டு, மத்திய அரசு வழங்கியுள்ள உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.இதுபோன்ற முக்கியமான கனிமங்களின் சுரங்க உரிமங்களை, மத்திய அரசு ஏலம் விடுவதால் ஏற்படும் பாதிப்புகளை, நீர்வளத்துறை அமைச்சர், கடந்த ஆண்டு, அக்., 3ம் தேதி, மத்திய அரசுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்திருந்தார். துரதிருஷ்டவசமாக, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, கடந்த ஆண்டு நவ., 2ம் தேதி எழுதியுள்ள கடிதத்தில், 'நாட்டின் நலன்களுக்காக, சுரங்க அமைச்சகத்தின் முக்கியமான கனிமங்களை ஏலம் விடுவதை தடுக்க முடியாது' என்று குறிப்பிட்டு, தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தார்.மதுரை நாயக்கர்பட்டியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க, 'இந்துஸ்தான் ஜிங்க்' நிறுவனத்தை, தகுதியான நிறுவனமாக மத்திய சுரங்கத்துறை தேர்வு செய்து அறிவித்துள்ளது. டங்க்ஸ்டன் சுரங்க பகுதியில், கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன.இவற்றில், அரிட்டாப்பட்டி, பல்லுயிர் பெருக்க வரலாற்று தலம், குடைவரை கோவில்கள், சிற்பங்கள், சமண சின்னங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள், பஞ்சபாண்டவர் கல் படுக்கைகள் உள்ளிட்ட தொல்பொருள் நினைவு சின்னங்களுக்கு பிரபலமானது. இந்தப் பகுதியில், எந்தவொரு சுரங்க நடவடிக்கை மேற்கொண்டாலும், அது ஈடுசெய்ய முடியாத சேதங்களை ஏற்படுத்தும்.மக்கள் தொகை அதிகம் உள்ள கிராமங்களில், வணிக ரீதியாக இதுபோன்று சுரங்கம் தோண்டுவது, கண்டிப்பாக அந்த கிராம மக்களை வெகுவாக பாதிக்கும். எனவே, தங்கள் வாழ்வாதாரம் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் உள்ள மக்களுக்கு, மத்திய அரசின் நடவடிக்கை மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பகுதிகளில், இதுபோன்ற சுரங்கத்தொழிலை மேற்கொள்ள, தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.எனவே, மதுரை மாவட்டத்தில் வழங்கப்பட்ட டங்க்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய, மத்திய சுரங்கத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.