உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெரிக்க மிரட்டலுக்கு அடிபணிய முடியாது; தொழில்துறை திட்டவட்டம்! மத்திய அரசின் ஆதரவுக்கு சைமா, டெக்ஸ்புரோசில் நன்றி

அமெரிக்க மிரட்டலுக்கு அடிபணிய முடியாது; தொழில்துறை திட்டவட்டம்! மத்திய அரசின் ஆதரவுக்கு சைமா, டெக்ஸ்புரோசில் நன்றி

கோவை: 'அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால், ஏற்றுமதி வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உண்மையே. அச்சந்தையை இழந்து விட முடியாது என்றாலும், அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்து விட முடியாது. இக்கட்டான சூழலில், பருத்தி இறக்குமதி வரி உள்ளிட்ட ஆதரவான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசுக்கு நன்றி' என, 'சைமா', 'டெக்ஸ்புரோசில்' தொழில் அமைப்புகள் தெரிவித்துள்ளன. தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) தலைவர் சுந்தரராமன், பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (டெக்ஸ்புரோசில்) துணை தலைவர் ரவி சாம் ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: பருத்தி இறக்குமதி மீதான 11 சதவீத வரி டிச., 31 வரை ரத்து என்ற அறிவிப்பு மிகத் தேவையான நேரத்தில் வெளியாகியுள்ளது. இதற்காக, பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஜவுளித் துறை அமைச்சர் கிரிராஜ் ஆகியோருக்கு நன்றி. இந்திய ஜவுளித் தொழிலின் சந்தை மதிப்பு 170 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதில், உள்ளூர் சந்தை 130 பில்லியன். 36 அல்லது 37 பில்லியன் ஏற்றுமதியாகிறது. இதில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்க சந்தையை நம்பியுள்ளது. எதிர்கொள்ள தயார் அமெரிக்க வரிவிதிப்பால் உடனடித் தாக்கம் இருக்கும் என்றாலும், தற்போதைய இறக்குமதி வரிச் சலுகை, ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்கள், கட்டமைப்பு மாற்றங்கள் போன்ற அரசின் நடவடிக்கைகளால், ஜவுளித்துறை இச்சவாலை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறது. 40 நாடுகளுடன் அரசு பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவுடனும் பேச்சு நடக்கிறது. சாதக முடிவை எதிர்பார்க்கிறோம். அமெரிக்காவின் பெட்ஷீட் சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு 76 சதவீதம். குளியலறை துண்டு சந்தையில் 52 சதவீதம். எனவே, அமெரிக்காவாலும் ஒரே இரவில் வேறு நாடுகளை நாட முடியாது. நம்மாலும் வேறு சந்தையைக் கைப்பற்றி விட முடியாது. இதை எதிர்கொண்டே ஆக வேண்டும். அதற்காக, அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்து விட முடியாது. உடனடி நிவாரணம் தேவை செயல்பாட்டு மூலதனம் முடங்குவதால், நிறுவனங்கள் நிதிச் சிக்கலில் மாட்டிக் கொள்ளும். எனவே, உடனடி நிவாரணம் தேவை. கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம், வட்டி சலுகை, சர்வதேச விலையில் பருத்தி, மாநில அரசின் மின் கட்டண சலுகை போன்றவற்றால் இந்த இடரில் இருந்து மீண்டு வர முடியும். இந்நிலை இப்படியே தொடராது. 2, 3 மாதங்களில் சாதகமான சூழல் திரும்பும். பிரிட்டன், ஆஸி., ஐரோப்பா உடனான வர்த்தகம் 40 சதவீதம் வரை அதிகரிக்கும். கரூரின் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி இரு மடங்காக உயர வாய்ப்புள்ளது. அமெரிக்க வரியால் நமக்கு 70 சதவீத வர்த்தக இழப்பு என்பது உண்மையே. அதற்காக, வேறு சந்தையைத் தேடாமல் இருக்க முடியாது; அமெரிக்க சந்தையையும் இழந்துவிட முடியாது. இச்சூழலில் தொழில்துறையின் தேவையை மத்திய அரசு பூர்த்தி செய்யும். நிச்சயம் தீர்வு வரும். இச்சவாலை, வாய்ப்பாக மாற்றுவோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். 'சைமா' செயலாளர் செல்வராஜ், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் உடனிருந்தனர்.

'விவசாயிகளுக்கு பாதிப்பில்லை'

“இந்திய பருத்தி உற்பத்தி ஆண்டுக்கு சராசரியாக 3.4 கோடி பேல்கள். அதில், 1 கோடி பேல்களை இந்திய பருத்திக் கழகம் குறைந்தபட்ச ஆதார விலையில் வாங்கிக் கொள்ளும். நடப்பாண்டு 2.95 கோடி பேல் மகசூல் எதிர்பார்க்கப்படுகிறது. தட்டுப்பாடு அளவுக்குத்தான் இறக்குமதியும் இருக்கும். 40 லட்சம் பேல் பருத்தி இறக்குமதியால், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது,” என, 'சைமா' தலைவர் சுந்தரராமன் தெரிவித்தார்.

'விரைவில் கருத்து கேட்பு'

கோவை தெற்கு எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறுகையில், “விரைவில், கோவையில் அனைத்து தொழில்துறையினரையும் அழைத்து கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படும். அவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்,” என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sitaraman Munisamy
ஆக 29, 2025 21:59

இதுவரை மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாதிக்கபடுவது சிறு தொழில் நிறுவனங்கள் மட்டுமே. வீர வசனம் பேசாமல் செயலில் இறங்க வேண்டும். ரஷ்யாவிடம் இந்தியா என்னை வாங்குகிறது எண்பது உறுதி செய்ய வேண்டும்.


Ramesh Sargam
ஆக 29, 2025 11:36

அமெரிக்க மிரட்டல், உரட்டல்களுக்கு இந்தியா அடி பணியாது என்றைக்கும். சபாஷ் இதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம்.


VENKATASUBRAMANIAN
ஆக 29, 2025 07:56

ஆர்எஸ்பாரதி ஊடகங்கள் இதை ஊதி பெரிதாக்க முயற்சி செய்கிறார்கள்.


Mecca Shivan
ஆக 29, 2025 07:33

இந்த அறிவு அதாவது தேசத்திற்கு துணையாக நிற்போம் அரசியலை பின் வைப்போம் என்ற அடிப்படை அறிவில்லாத ஜீவன்கள் இதை அரசியலாக்குவது வெட்கக்கேடு .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை