திரைப்பட தயாரிப்பாளர் மீதான வழக்கு: அமலாக்க துறையின் மனு தள்ளுபடி
'டாஸ்மாக்' முறைகேடு விவகாரத்தில், திரைப் படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரிய அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில், டாஸ்மாக் நிறுவனத்தில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட புகாரின்படி, கடந்த மார்ச்சில், அந்நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்களிலும், சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோரின் வீடுகளில், மே மாதத்தில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர், முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அவரிடமே திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் இடைக்கால தடை விதித்தது. எனினும், ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என, மீண்டும் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்தது. இதை நேற்று விசாரித்த நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு, அமலாக்கத் துறையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. - டில்லி சிறப்பு நிருபர் -: