பற்களை பிடுங்கிய விவகாரம் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு எதிரான வழக்குக்கு தடை
மதுரை: விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி துன்புறுத்தியதாக பதிவான வழக்கில், குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி, ஐ.பி.எஸ்., அதிகாரி பல்வீர் சிங் மனு தாக்கல் செய்ததில், கீழமை நீதிமன்றத்தில் மேல்விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.,யாக பணிபுரிந்தவர் பல்வீர் சிங். வழக்குகள் தொடர்பாக விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி துன்புறுத்தியதாக, இவர் உட்பட 14 போலீசார் மீது, திருநெல்வேலி சி.பி.சி.ஐ.டி., போலீசார், 2023ல் நான்கு வழக்குகள் பதிந்தனர்; திருநெல்வேலி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல்வீர் சிங் தாக்கல் செய்த மனு: மக்களை பாதுகாக்க சமூக விரோதிகள், ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தேன். என் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. தவறான உள்நோக்கில் வழக்கு பதியப்பட்டுள்ளது. தமிழ் என் தாய்மொழி அல்ல. குற்றப்பத்திரிகை மற்றும் சாட்சிகளின் வாக்குமூலத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எனக்கு கீழமை நீதிமன்றம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தமிழில் வழங்கியது சட்டப்படி ஏற்புடையதல்ல. என் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க தடை விதிப்பதுடன், அவற்றை ரத்தும் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி சமீம் அகமது பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் தமிழகத்தில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். தமிழ் தெரியாத அவருக்கு குற்றச்சாட்டுகளை அதே மொழியில் வழங்கியது ஏன்? கீழமை நீதிமன்றம் மனதை சரியாக செலுத்தாமல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. குற்றச்சாட்டு பதிவு செய்வதற்கு ஆதாரமாக ஆவணம், சான்றுகள் இல்லை. எனவே, மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் அதனடிப்படையில் கீழமை நீதிமன்றத்தில் மேல்விசாரணை நடத்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. விசாரணை ஜன., 27க்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.