சீமானுக்கு எதிரான வழக்கு: விரைந்து விசாரிக்க உத்தரவு
சென்னை : சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில், 2010 ஜூலை 10ல், நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது, 'தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குவது நீடித்தால், தமிழகத்தில் தங்கி படிக்கும், சிங்கள மாணவர்கள் உயிருடன் நடமாட முடியாது' என்றார்.இதையடுத்து, இரு பிரிவினருக்கு இடையே, வன்முறையை துாண்டும் விதமாக பேசியதாகக் கூறி, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சீமானை கைது செய்தனர். பின், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.இது தொடர்பான வழக்கு, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கில் 2018ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், 2021ல் சீமான் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.ராஜாகுமார் ஆஜராகி, ''வழக்கில் சாட்சி விசாரணை துவங்கி, இதுவரை 10க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது. வழக்கை ரத்து செய்யக்கூடாது,'' என்றார். அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சங்கர், ''வழக்கில் சாட்சிகள் விசாரணை துவங்கி விட்டதால், மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.இதையடுத்து நீதிபதிகள், மனுவை திரும்பப் பெற அனுமதித்ததோடு, 'மனுதாரருக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கை, விசாரணை நீதிமன்றம் விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும்,' என, உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தனர்.