கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்தம் 3 பேர் மீது வழக்கு பதிவு
தேனி: தேனி கோடாங்கிபட்டி பட்டதாரி பெண் மீனவினோதினியிடம் 32, கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகன் மதுரை கோமதிபுரம் திருக்குறள் தெரு நவஜீவன் 32, அவரது தாயார் காமாட்சி 55, தந்தை திருஞானசம்பந்தம் 61, மீது மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.கோடாங்கிபட்டி எம்.பி.ஏ., பட்டதாரி மீனவினோதினி. இவர் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்தார். தாயார் உடல் நிலை சரியில்லாததால் வேலை விட்டு விட்டு சொந்த ஊருக்கு வந்தார். இவருக்கும் மதுரை நவஜீவனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் 2024 ஜூனில் தேனி தனியார் ஓட்டலில் நடந்தது.பெண்ணிற்கு வரதட்சனையாக 60 பவுன் நகைகள், 10 கிலோ வெள்ளியை நவஜீவன் வீட்டார் கேட்டனர். இதனை தருவதாக மீனவினோதினி சித்தப்பா கூறினார். இந்நிலையில் 80 பவுன் நகையும், திருமணத்தை திருப்பதியில் நடத்த வேண்டும். அங்குள்ள உயர்தர ஓட்டலில் அறைகள் பதிவு செய்ய மணமகன் வீட்டினர் கூறினர். சில நாட்களுக்கு முன் நவஜீவனின் தாயார் காமாட்சி அலைபேசி மூலம் மீனவினோதினியை தொடர்பு கொண்டு 100 பவுன் நகைகள் வேண்டும் என கூறி திருமணத்தை நிறுத்தினார். இதனால் மீனவினோதினி மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். அதன்படி தேனி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து நவஜீவன், காமாட்சி, திருஞானசம்பந்தம் மீது வழக்கு பதிந்தனர்.