உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அரசு தலைமை மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் நிறுவ வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

 அரசு தலைமை மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் நிறுவ வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை: தென்மாவட்ட கிராமப்புற அரசு தலைமை மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ.,ஸ்கேன் வசதி நிறுவ தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. மதுரை ஆனந்தராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு: உசிலம்பட்டியிலுள்ள அரசு தலைமை மருத்துவமனை மற்றும் திருமங்கலம், வாடிப்பட்டி, மேலுார், பேரையூர் தாலுகா மருத்துவமனைகள், அருகிலுள்ள பிற மாவட்ட தாலுகா மருத்துவமனைகளிலிருந்து எம். ஆர்.ஐ., ஸ்கேன் பரிசோதனைக்காக நோயாளிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். அங்கு எம்.ஆர்.ஐ.,ஸ்கேன் பிரிவில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. காலதாமதம் ஏற்படுகிறது. உயர்நீதிமன்றம்,'அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் ஓராண்டிற்குள் எம்.ஆர்.ஐ.,ஸ்கேன் வசதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என 2017 ல் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி அரசு தலைமை மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ.,ஸ்கேன் நிறுவப்பட்டது. பிற தென்மாவட்டங்களில் கிராமப்புற மக்களின் நலனிற்காக அரசு தலைமை மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ.,ஸ்கேன் நிறுவவில்லை. மதுரை மாவட்டம்உசிலம்பட்டி, பெரியகுளம் (தேனி), காரைக்குடி( சிவகங்கை), கும்பகோணம் (தஞ்சாவூர்), அறந்தாங்கி (புதுக்கோட்டை), மணப்பாறை (திருச்சி), கோவில்பட்டி (துாத்துக்குடி), பத்மநாபபுரம் (கன்னியாகுமரி) அரசு தலைமை மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ.,ஸ்கேன்நிறுவ தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சகா ஆஜரானார். நீதிபதிகள் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர், மருத்துவ மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குனரக இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு டிச.5 க்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை