சென்னை:ஐஸ்கிரீம் மற்றும் 'குல்பி' தயாரிக்க, 65 கோடி ரூபாய் செலவில், தொழிற்சாலை துவக்கப்பட்டுள்ள நிலையில், குல்பி வகைகள் உற்பத்தியை ஆவின் நிறுவனம் திடீரென நிறுத்தியுள்ளது.ஆவினில், முந்திரி, பாதாம், பிஸ்தா, சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி, லிச்சி, ஆரஞ்ச், மேங்கோ என, பல வகைகளில் குல்பி தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இவை, சென்னை அம்பத்துார் பால் பண்ணையில் தயாரிக்கப்பட்டன. உற்பத்தியை அதிகரிப்பதற்காக, மதுரை பால் பண்ணை வளாகத்தில், 65 கோடி ரூபாய் செலவில், புதிய குல்பி மற்றும் ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டது; அதை, 2022 மார்ச்சில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.இந்த தொழிற்சாலை நாள்தோறும் 30,000 லிட்டர் ஐஸ்கிரீம் மற்றும் குல்பி தயாரிக்கும் திறன் உடையது. அதனால், குல்பி உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஒரு மாதத்திற்கு முன், அம்பத்துார் ஆவின் பண்ணையில், குல்பி உற்பத்தி நிறுத்தப்பட்டது. மதுரையில் மட்டும் தயாரிக்கப்படும் என, தகவல் கூறப்பட்டது. ஆனால், அங்கு பாதாம், பிஸ்தா, முந்திரி குல்பி மட்டுமே தயாரிக்கப்பட்டன. போதிய விற்பனை இல்லாததால், மற்ற குல்பி வகைகளின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக, ஆவின் விற்பனைப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தெரியாமல், ஆவின் குல்பி வகைகள் வாங்க முன்பதிவு செய்த பாலகங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளன; நுகர்வோரும் ஏமாற்றம் அடைகின்றனர். அத்துடன், முன்னர் அட்டை பெட்டிகளில் விற்பனைக்கு வந்த குல்பி, தற்போது பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து தரப்படுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.