UPDATED : ஆக 08, 2024 05:28 PM | ADDED : ஆக 08, 2024 05:06 PM
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதற்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, குற்றச்சாட்டு பதிவுக்காக, நேற்று செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது.இந்நிலையில், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரி, செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனுவை, நேற்று நீதிபதி எஸ்.அல்லி விசாரித்தார். செந்தில் பாலாஜி தரப்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், அமலாக்கத் துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.இதையடுத்து, குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைக்க கோரிய மனு மீதான உத்தரவை, இன்று பிறப்பிப்பதாக தெரிவித்த நீதிபதி, குற்றச்சாட்டு பதிவுக்காக, செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். 'நேரில் ஆஜர்படுத்தவில்லை என்றாலும், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜர்படுத்த வேண்டும்; அப்போது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும். செந்தில் பாலாஜியின் உடல் நலம் குறித்த அறிக்கையை, சிறை அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும்' என நீதிபதி கூறியிருந்தார்.இதனையடுத்து, செந்தில்பாலாஜி இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவுக்காக பலத்த பாதுகாப்புடன் நீதிபதி அல்லி ஆஜர்படுத்தப்பட்டார்.செந்தில்பாலாஜி நீதிமன்றத்திற்கு வந்த போது கையில் குளுக்கோஸ் ஏற்றுவதற்காக பொருத்தப்படும் ஊசியுடன் இருந்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை இன்னும் முழுமை பெறாததால் அப்படியே அழைத்து வரப்பட்டார்.நாற்காலியில் அமர வைக்கப்பட்ட செந்தில்பாலாஜியிடம், அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்துக்காட்டி அதனை பதிவு செய்தார். செந்தில்பாலாஜி குற்றச்சாட்டுகளை மறுத்தார். தன் மீதான குற்றச்சாட்டுகள் புனையப்பட்டவை எனக்கூறினார். இதற்கு நீதிபதி அல்லி, செந்தில்பாலாஜியின் கருத்துகளை கேட்பேன். ஆனால், பரிசீலிக்க முடியாது எனக்கூறினார்.குற்றச்சாட்டு பதிவின் போது, அமலாக்கத்துறை மற்றும் செந்தில்பாலாஜி தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.