மேலும் செய்திகள்
சாரணர் பயிற்சி முகாம்
29-Jan-2025
திருச்சி : ''தமிழகத்தில் சாரணர் இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில், 10 கோடி ரூபாய் செலவில் தலைமை அலுவலகம் கட்டப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சிப்காட் வளாகத்தில், 28ம் தேதி, பாரத சாரணர் வைர விழா மற்றும் கருணாநிதி நுாற்றாண்டு விழா நினைவு பெருந்திரள் பேரணி துவங்கியது. நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த, 15,000க்கும் மேற்பட்ட சாரண, சாரணியர் பங்கேற்றனர்.ஐந்து நாட்களாக நடந்து வரும் விழாவில், சாரணர்களின் கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு பேரணி, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:இல்லம் தேடி கல்வித்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதால், தமிழகத்தில் பிளஸ் 2, 10ம் வகுப்புகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையை நவீனமாக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு லேப்டாப், ஹைடெக் லேப், கலைத்திருவிழா என, பள்ளிக்கல்வித் துறையை மிகவும் சிறப்பாக வழிநடத்துகிறார் அமைச்சர் மகேஷ்.இந்தியாவில் உள்ள 80 லட்சம் சாரணர்களில், 12 லட்சம் பேர் தமிழகத்தில் உள்ளனர். எதுவாக இருந்தாலும், தமிழகத்தின் பங்கு அதிகம் இருக்கும் என்பதற்கு இது உதாரணம்.உள்ளத்தை, உடலை, ஒழுக்கத்தை உறுதி செய்வது சாரணர் இயக்கம். மாணவர்களிடம் திறன்களை வளர்ப்பதில் சாரணர் இயக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுவரை, 18 பெருந்திரள் பேரணிகள் நடந்துள்ளன. கடந்த, 2000ம் ஆண்டு சென்னையில் நடந்த பொன் விழா ஜம்போரியில், முதல்வராக இருந்த கருணாநிதி பங்கேற்றார். தற்போது நான் வைர விழாவில் பங்கேற்றுள்ளேன். இந்த விழாவில், சாரணர்கள் அதிகம் கூடியது, கைதட்டியது உட்பட ஐந்து உலக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சாரணர் இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில், 10 கோடி ரூபாய் செலவில், தலைமை அலுவலகம் கட்டப்படும். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலின், மத்திய பேருந்து பின்புறம் உள்ள, பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், நீதிக்கட்சியின் சர் ஏ.டி.பன்னீர்செல்வம், ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோரின் மணிமண்டபங்களில் உள்ள சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.மணிமண்டபத்தில் உள்ள நுாலகம், தலைவர்களின் புகைப்படங்கள் ஆகியவற்றை ஸ்டாலின் பார்வையிட்டு, மணிமண்டபங்களை துாய்மையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
29-Jan-2025