உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புயல் நிவாரணம் ரூ.5,000 முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புயல் நிவாரணம் ரூ.5,000 முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி, “பெஞ்சல் புயல் நிவாரணமாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்,” என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.இதுகுறித்து முதல்வர் ரங்கசாமி கூறியதாவது: மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக, புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும், தலா 5,000 ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும்.மழையால், 10,000 எக்டேர் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நிவாரணமாக எக்டேருக்கு 30,000 ரூபாய் வழங்கப்படும். மழையால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். மழையில் இறந்த நான்கு மாடுகளுக்கு தலா 40,000, 16 கன்றுகளுக்கு தலா 20,000 ரூபாய் வழங்கப்படும். பழுதடைந்த 50 படகுகளை சீரமைக்க, தலா 10,000 ரூபாய் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட 15 குடிசைகளுக்கு, தலா 20,000 சிறிய பாதிப்பு ஏற்பட்ட 10 வீடுகளுக்கு, 10,000 ரூபாய் வழங்கப்படும்.சாத்தனுார் அணை நீர் திறப்பால் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, பாகூர் பகுதியும், வீடூர் அணை திறப்பால் சங்கராபரணி கரையோரம் உள்ள 10 கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்து உணவு வழங்கப்பட்டு வருகிறது. நகர பகுதியில், 90 சதவீத வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.இவ்வாறு முதல்வர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை