உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.டி., நிறுவனங்களுக்கு உதவ சிறப்பு மையம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஐ.டி., நிறுவனங்களுக்கு உதவ சிறப்பு மையம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:''தமிழகத்தில் உள்ள அனைத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், தேவையான உதவிகளை வழங்க, எல்காட் நிறுவனம் சார்பில், சிறப்பு உதவி மையம் அமைக்கப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில், 'யூமாஜின் டி.என்.,' என்ற பெயரில், இரண்டு நாள் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று துவங்கியது. மாநாட்டு வளாகத்தில், தொழில்நுட்பக் கண்காட்சியும் நடக்கிறது.

வேலைவாய்ப்பு

மாநாட்டை துவக்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியில், தமிழகம் எப்போதும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின், இணையக் கருவிகள், மின்வாகன உற்பத்தி மற்றும் வளரும் தொழில்நுட்பங்களில், மாற்றங்களை ஏற்படுத்துகின்ற முன்னெடுப்புகளை, தமிழக அரசு செய்து வருகிறது. கோவை, சேலம், மதுரை, திருச்சி, ஒசூர், திருநெல்வேலி, வேலுார்,விழுப்புரம், துாத்துக்குடி போன்ற, இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களிலும், 'எல்காட்' தொழில்நுட்ப பூங்காக்கள் நிறுவப்பட்டுள்ளன. வளர்ச்சி என்பது தலைநகரத்தில் மட்டுமே குவியக்கூடாது. சென்னை மட்டுமின்றி மற்ற நகரங்களை சுற்றியுள்ள இளைஞர்களுக்கும், அதே பகுதியில் வேலை வாய்ப்பு கிடைக்க, பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம். அந்த வரிசையில், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்திற்காக, கோவையில், 20 லட்சம் சதுர அடியில், 'தகவல் தொழில்நுட்ப வெளி' நிறுவ உள்ளோம்.

'நான் முதல்வன் திட்டம்'

தமிழகம் முழுதும் உள்ள, 900க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள், 2,000க்கும் அதிகமான தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில், அரசு செயல்பட்டு வருகிறது. விரைவில் தகவல் தொழில்நுட்பக் கொள்கை வெளியிடப்படும். ஐ.டி., துறை வளர்வதற்கு, மனிதவளம் மிக முக்கியம். அதற்காகவே, 'நான் முதல்வன் திட்டம்' உருவாக்கப்பட்டது. ஐ.சி.டி., பயிற்சி நிறுவனம் வாயிலாக, கடந்த ஓராண்டில், 10,435 ஆசிரியர்கள், 34,267 மாணவர்கள் தொழில் திறன் பயிற்சி பெற்றுள்ளனர்.

'சைபர்' பாதுகாப்பு

தமிழ் மொழியை மேம்படுத்த, உரை திருத்தி, பிழை திருத்தி என, பல மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொடர்பான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக, 'சைபர்' பாதுகாப்பு தொழில்நுட்ப உதவி பிரிவை ஏற்படுத்த உள்ளோம். தமிழகத்தில் உள்ள, அனைத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், ஒத்துழைப்பு மற்றும் உதவிகளை வழங்க, 'எல்காட்' நிறுவனம், சிறப்பு உதவி மையம் அமைக்க உள்ளது. இவ்வாறு முதல்வர் பேசினார்.விழாவில், அமைச்சர் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் செயலர் குமார் ஜெயந்த், தமிழக மின்னாளுமை முகமை இயக்குநர் கோவிந்தராவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ