குழந்தை பராமரிப்பு மையம்: வழிகாட்டு விதிகள் வெளியீடு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் குழந்தை பராமரிப்பு மையம் அமைக்க, வழிகாட்டு விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.நாடு முழுதும் அரசு அலுவலகங்களில் பணிக்கு வருவோர், பணி நேரத்தில் தங்கள் குழந்தைகளை பராமரித்துக் கொள்ள, குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான இடங்களில், ஒரு அறையை மட்டும் ஒதுக்கீடு செய்துவிட்டு, வேறு வசதிகள் செய்வதில்லை. இந்நிலையில், பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் அமைப்பதற்கான வழிகாட்டு விதிகளை, யு.ஜி.சி., என்ற பல்கலை மானியக்குழு வெளியிட்டுள்ளது. இந்த விதிகள், https://www.ugc.gov.inஎன்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.புதிய விதிகளின்படி, குழந்தை பராமரிப்பு மையங்களுக்கு, அதற்கான கல்வித்தகுதி பெற்ற பாதுகாப்பாளர் மற்றும் பராமரிப்பு பணியாளர் நியமிக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு உணவூட்டும் வசதி, சுத்திகரிக்கப்பட்ட ஆரோக்கியமான குடிநீர், குழந்தைகள் பயன்படுத்தும் வகையிலான கழிப்பறை வசதி அமைக்கப்பட வேண்டும்.மருத்துவ முதலுதவி, தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட வேண்டும். கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டியது கட்டாயம்; தரமான, குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விளையாட்டு உபகரணங்களும் நிறுவப்பட வேண்டும் என, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.