சென்னை : குழந்தைகள் விருப்பத்தின்படி, தந்தையுடன் செல்ல அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், சட்டவிரோத காவலில் உள்ள குழந்தைகளை மீட்டு தரக்கோரிய தாயின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.சென்னையைச் சேர்ந்த தம்பதியர் அமெரிக்காவில் குடியேறினர். அங்கு அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. சில ஆண்டுகளில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விவாகரத்து பெற்றனர். இதையடுத்து, இரண்டு குழந்தைகளையும், அவர்களின் தந்தை சென்னைக்கு அழைத்து வந்தார். தந்தை, தாத்தா பராமரிப்பில் இரண்டு குழந்தைகளும் வளர்ந்து வந்தனர். பெண் குழந்தைக்கு 15 வயது; ஆண் குழந்தைக்கு 13 வயது.இரண்டு குழந்தைகளும் சட்டவிரோத காவலில் இருப்பதாகவும், குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் அவரது தாய் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, குழந்தைகள் இருவரும் தன் தந்தையுடன் ஆஜராகினர். குழந்தைகளை அருகில் அழைத்த நீதிபதிகள், இருவரிடமும் விசாரித்தனர். அப்போது, குழந்தைகள் இருவரும் ஆங்கிலத்தில் பதிலளித்தனர்.அதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சென்னை வளசரவாக்கத்தில் தந்தை மற்றும் தாத்தாவுடன் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றாக உள்ளனர். அப்பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் இருவரும், பள்ளியின் டாப்பர்ஸ். சட்டவிரோத காவலில் இரு குழந்தைகளும் இல்லை. இதை, அவர்களை அழைத்து விசாரித்ததில் அறிய முடிகிறது. குழந்தைகள் இருவரும் தாயுடன் செல்ல விரும்பவில்லை. அவர்களின் விருப்பத்தை தெளிவாக தெரிவித்துள்ளனர். உலகளவில் குழந்தைகளின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, இந்த வழக்கில் குழந்தைகள் இருவரின் விருப்பம், உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும். எனவே, தாயின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.குழந்தைகள் இருவரும் அவர்களின் விருப்பப்படி, தந்தையுடன் செல்லலாம்.இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவை பிறப்பித்த பின், இரண்டு குழந்தைகளும் நீதிபதிகள் அருகில் சென்றனர். அவர்களிடம், 'நீங்கள் ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா' என, நீதிபதிகள் கேட்டனர். அதற்கு இருவரும், 'நன்றி' என சிரித்தபடி தமிழில் தெரிவித்தனர். இந்த உத்தரவை அடுத்து, நீதிமன்றத்தில் இருந்த குழந்தைகளின் தாயார், கண்கலங்கியபடி வெளியே சென்றார்.