மேலும் செய்திகள்
கண்ணகி நகர் மயானத்தில் கஞ்சா விற்ற இருவர் கைது
31-Jul-2025
சென்னை:சென்னை கண்ணகி நகரில், சாலையில் பழுதடைந்த மின் கேபிள் மீது, தேங்கி நின்ற மழைநீரில் நடந்து சென்ற துாய்மை பணியாளரான பெண் மின்சாரம் தாக்கி பலியானார். அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில், 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை ஓ.எம்.ஆர்., என்ற பழைய மாமல்லபுரம் சாலையில், கண்ணகி நகர், ஐந்தாவது பிரதான சாலையைச் சேர்ந்த ரவியின் மனைவி வரலட்சுமி, 30; மாநகராட்சியின் திடக் கழிவு மேலாண்மை பணியை ஒப்பந்தம் எடுத் துள்ள, 'உர்பேசர் சுமித்' என்ற நிறுவனத்தில் துாய்மை பணியாளராக இருந்தார். இவர், அடையாறு மண்டலம், 173வது வார்டில் துாய்மை பணி செய்து, குடும்பத்தை தனி ஆளாக கவனித்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு, வீட்டில் ஓய்வெடுத்து வரும் கணவர் ரவியின், 33, மருத்துவ செலவு, பிள்ளைகள் யுவஸ்ரீ, 12, மணீஷ், 9, ஆகியோரின் படிப்பு செலவுகளையும் பார்த்து வந்தார். சென்னையில் இரண்டு நாட்களாக அதிகாலையில் பலத்த மழை பெய்தது. துாய்மை பணிக்கு செல்ல, வீட்டில் இருந்து நேற்று அதிகாலை 5:30 மணிக்கு புறப்பட்டார். மழையால், கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் தேங்கி நின்ற தண்ணீரில் கால் வைத்த போது, தேங்கிய மழைநீரில் கசிந்த மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த மின்வட கேபிளில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு, தண்ணீரில் மின்சாரம் பாய்ந்திருந்தது. அவ்வழியே சென்றவர்கள், இறந்து கிடந்த வரலட்சுமியை பார்த்து, மின் வாரியத்திற்கும், கண்ணகி நகர் போலீசாருக்கும் தகவல் அளித்தனர். பின், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனைக்கு பின், வரலட்சுமி உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, வரலட்சுமியின் குடும்பத்திற்கு, மின் வாரியம் சார்பில், 10 லட்சம் ரூபாய் மற்றும் 'உர்பேசர் சுமித்' நிறுவனம் சார்பில், 10 லட்சம் ரூபாய் என, மொத்தம் 20 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது . இதற்கான காசோலையை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், வரலட்சுமியின் கணவர் ரவி மற்றும் குழந்தை களிடம் வழங்கினார். பின், அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது: இரண்டு குழந்தைகளின் எதிர்கால படிப்பு செலவை, சோழிங்கநல்லுார் தொகுதி தி.மு.க., ஏற்றுக் கொள்ளும். வரலட்சுமியின் இறுதிச் சடங்கு செலவை, தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் ஏற்றுக் கொண்டார். ரவியின் மருத்துவ சிகிச்சையை அரசு பொறுப்பேற்று செய்யும். அதோடு, ரவிக்கு மேற்பார்வையாளர் போன்ற இலகுவான பணி வழங்க, உர்பேசர் சுமித் நிறுவனத்திடம் கூறி உள்ளோம்; அவர்களும் சம்மதித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். உயிரிழந்த வரலட்சுமி உடலுக்கு, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். கவுன்சிலர் புகார் கண்ணகி நகரில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தினமும் ஏதாவது ஒரு பிளாக்கில் மின் தடை ஏற்படுகிறது. குழாய் பதிப்பு, வடிகால்வாய் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டும் போது, சேதமடையும் புதைவட மின் கேபிளுக்கு மாற்றாக, புது கேபிள் வாங்கி கொடுத்தாலும், மின் வாரியம் உடனே பணி செய்வதில்லை. கண்ணகி நகரில் உள்ள மின் பிரச்னைகள் தொடர்பான மனுவை, ஜூன் மாதம், மின் வாரிய தலைவரிடம் வழங்கினேன்; நடவடிக்கை எடுக்கவில்லை. இனிமேலாவது, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். - அஸ்வினி கர்ணா, 196வது வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலர்
கிழக்கு கடற்கரை சாலையில், ஈஞ்சம்பாக்கம், முனீஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த கொத்தனார் சாமுவேல், 57, நேற்று முன்தினம் நடந்து சென்றபோது, பிள்ளையார் கோவில் தெருவில் தேங்கி கிடந்த தண்ணீரில் மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இதை கவனிக்காத சாமுவேல், தண்ணீரில் கால் வைத்தபோது, மின்சாரம் பாய்ந்து இறந்தார். இரண்டாவதாக, வரலட்சுமியும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். எச்சரித்த 'தினமலர்' கண்ணகி நகரில், 23,704 வீடுகளுக்கு முறையான மின் சேவை வழங்கப்படுவதில்லை. சம்பவம் நடந்த, 11வது குறுக்கு தெருவில், இரு மின் பகிர்மான பெட்டிகள் இடையே, பிளாஸ்டிக் குழாயுடன் கேபிள் பதிக்கப்படவில்லை. அரை அடி பள்ளத்தில் கேபிள் புதைக்கப்பட்டு உள்ளது. அதை சரியாக மூடவும் இல்லை. இதன் மீது தொடர்ச்சியாக வாகனங்கள் சென்று, ஏற்கனவே இரண்டு முறை, மின் கேபிள் துண்டானது. அப்போதும் முறையாக சரி செய்யாமல், சாதாரண, 'டேப்'பால் கேபிளில் ஒட்டு போட்டுள்ளனர். பழுதடைந்த கேபிளை மாற்றாததால், அசம்பாவிதம் நடக்கும் அபாயம் உள்ளது என, நம் நாளிதழில் ஏற்கனவே செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மின் வினியோக சாதனங்களை முறைப்படி ஆய்வு செய்து, சேதமடைந்த சாதனங்களை சரி செய்ய வேண்டும். இந்த பணியில் மின் வாரியம், மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறையினர் இணைந்து செயல்பட வேண்டும். பருவ மழை துவங்கும் முன், சேதமடைந்த சாதனங்களை சரி செய்யும் பணியை முடுக்கி விட வேண்டும். - சடகோபன், தலைவர் தமிழக முற்போக்கு நுகர்வோர் மையம்
31-Jul-2025