உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இடைக்கால நிவாரணம் ரூ.2,000 கோடி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இடைக்கால நிவாரணம் ரூ.2,000 கோடி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை, தமிழகத்தில் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 2,000 கோடி ரூபாய் வழங்கக்கோரி, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் 14 மாவட்டங்களில், 'பெஞ்சல்' புயல், வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இந்த பேரிடரால், 69 லட்சம் குடும்பங்கள், 1.5 கோடி பேர், மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், 50 செ.மீ.,க்கு மேல் ஒரே நாளில் மழை பெய்துள்ளது. இதன் விளைவாக வெள்ளம் ஏற்பட்டது. உள்கட்டமைப்பு மற்றும் பயிர்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்க, தமிழக அரசு தன்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் திரட்டி உள்ளது. இந்தப் பேரழிவின் காரணமாக, 12 பேர் இறந்துஉள்ளனர். மேலும், 2,416 குடிசைகள், 721 வீடுகள் இடிந்து உள்ளன. கால்நடைகள், 963 இறந்துள்ளன. தண்ணீரில், 5.21 லட்சம் ஏக்கர் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் மூழ்கி உள்ளன.இவை தவிர, 9,576 கி.மீ., நீள சாலைகள், 1,847 சிறு பாலங்கள், 417 குளங்கள், 1,649 கி.மீ., அளவிற்கு மின் கடத்திகள், 23,664 மின் கம்பங்கள், 997 மின்மாற்றிகள், 1,650 ஊராட்சி கட்டடங்கள், 4,269 அங்கன்வாடி மையங்கள், 205 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5,936 பள்ளி கட்டடங்கள், 381 சமுதாய கூடங்கள், 623 குடிநீர் வழங்கல் பணிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு, 2,475 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. எனவே, இடைக்கால நிவாரணமாக, 2,000 கோடி ரூபாயை உடனடியாக விடுவியுங்கள். இந்த அவசர கால நிதி, மறு சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு முயற்சிகளுக்கு, மாநில அரசுக்கு பெருமளவில் உதவியாக இருக்கும். தமிழகத்தில் புயல், வெள்ளத்தால் ஏற்பட்டு உள்ள சேதங்கள் குறித்து மதிப்பிட, மத்திய குழுவை விரைவில் அனுப்பி வைக்க வேண்டும்; மத்திய குழு ஆய்வு அடிப்படையில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உதவ, கூடுதல் நிதியை வழங்க வேண்டும். தமிழகம் எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியான நிலையில் இருந்து மீண்டு, இயல்பு நிலையை விரைவில் எட்ட, தமிழகத்திற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன். பிரதமரின் ஆதரவையும், சாதகமான பதிலையும் விரைவில் எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை