உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவலர் பணி திறன் மதிப்பீடு பதிவில் ஜாதி பெயர் கூடாது அரசுக்கு ஆணையம் பரிந்துரை

காவலர் பணி திறன் மதிப்பீடு பதிவில் ஜாதி பெயர் கூடாது அரசுக்கு ஆணையம் பரிந்துரை

சென்னை: 'காவலர் வருடாந்திர பணித்திறன் மதிப்பீட்டு பதிவில், ஜாதி பெயரை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை' என, அரசுக்கு, காவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. காவலர்கள் பணியில் சேர்ந்த நாளில் இருந்து, ஓய்வுபெறும் நாள் வரை, அவர்கள் பெற்ற பதவி உயர்வு, தண்டனைகள், ஊதிய உயர்வு உள்ளிட்ட விபரங்கள், ஏ.சி.ஆர்., எனப்படும் வருடாந்திர ரகசிய அறிக்கையில் பராமரிக்கப்படும். அதேபோல, அவர்களின் செயல் திறனும் மதிப்பீடு செய்யப்படும். இதன் வாயிலாக, காவலர்களுக்கு, அதிகாரிகள் பாராட்டு சான்றிதழ் அளிப்பர். பதக்கங்கள் வழங்க பரிந்துரை செய்வர். இந்நிலையில், காவல் துறையில் ஜாதி சார்பு அதிகாரிகள் அதிகரித்து வருவதாகவும், காவலர் பணித்திறன் மதிப்பீடு பகுப்பாய்வில் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான காவல் ஆணையத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த ஆணையம், 'காவலர்களின் பணித்திறனை உயர் அதிகாரிகள் பாராட்டுவதற்கு, அவர்களின் ஜாதி பற்றி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜாதி பெயரை அறிந்து கொள்வதால், அதிகாரிகள் சார்பு தன்மையுடன் செயல்பட வாய்ப்பு அதிகம். இதனால், காவலர்களுக்கான பணித் திறன் மதிப்பீடு பதிவில் ஜாதி பெயரை குறிப்பிட வேண்டாம் என, உத்தரவிட வேண்டும்' என, அரசுக்கு பரந்துரை செய்துள்ளது. போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'காவலர்கள் பணித்திறன் மதிப்பீடு மற்றும் வருடாந்திர ரகசிய அறிக்கை, 'ஸ்பேரோ' என்ற செயலி வாயிலாக பாதுகாக்கப்படுகிறது. அதில், காவலர்களின் ஜாதி பெயரை பார்க்க முடியாதபடி செய்யும் பணி நடக்கிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !