| ADDED : மார் 08, 2024 11:00 PM
உயர்வுக்கு அரசு காரணமில்லை குறைப்புக்கு கம்பெனி பொறுப்பல்ல
காஸ் விலை உயர்வு குறித்து கேட்டபோது, 'எண்ணெய் கம்பெனிகளின் தினசரி செயல்பாடுகளில் அரசு தலையிடுவதில்லை' என, அப்போதைய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 2017, செப்., 3ல் பதில் அளித்தார். அடுத்த ஆண்டு அக்., 16ல் இதே பிரச்னை பற்றி பேசும்போது, 'பெட்ரோலியப் பொருட்கள் மீதான விலையை நிர்ணயம் செய்வதில் அரசு தலையிடாது.அதை, எண்ணெய் கம்பெனிகள் தினசரி நிலவரத்தின் அடிப்படையில் செய்து வருகின்றன' என்றார்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அடிப்படையிலேயே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. கடந்த 2014ல் பா.ஜ., ஆட்சிக்கு வந்தபோது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 113 டாலராக இருந்தது. ஆனால், 2015 ஜனவரியில் 50 டாலராக சரிந்தது. தொடர்ந்து, 2016 ஜனவரியில் 29 டாலருக்கு இறங்கியது.ஆனால், அந்த இறக்கத்துக்கு நிகராக பெட்ரோலிய பொருட்கள் விலை குறைக்கப்படவில்லை. அரசு தரப்பில் இதுவரை பதில் இல்லை. கடந்த 2021, பிப்., 18ல் பிரதமர் மோடி பேசுகையில், 'எரிபொருள் இறக்குமதியில் மற்ற நாடுகளை நாம் சார்ந்திருக்கும் நிலையை முந்தைய அரசுகள் குறைத்திருந்தால், நடுத்தர வர்க்கத்தின் மீது இவ்வளவு சுமை ஏறியிருக்காது' என ஆதங்கப்பட்டார்.