உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வடகாடு பிரச்னையில் இழப்பீடு: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

வடகாடு பிரச்னையில் இழப்பீடு: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை : புதுக்கோட்டை மாவட்டம் வடகாடுவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் திருமணஞ்சேரி சண்முகம் தாக்கல் செய்த பொதுநல மனு: மே 5 ல் வடகாடு மாரியம்மன் கோயில் திருவிழாவில் பங்கேற்ற குறிப்பிட்ட சமூகத்தினர் தாக்கப்பட்டனர். சிலர் காயமடைந்தனர். வீடுகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.வடகாடு போலீசார் வழக்கு பதிந்தனர். வழக்கு விசாரணையை எஸ்.பி., ஆலங்குடி டி.எஸ்.பி., மேற்கொள்ள வேண்டும். தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்காணிப்பு கேமராக்கள், அலைபேசி வீடியோ பதிவு மூலம் அடையாளம் காண வேண்டும்.பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தினரை கோயிலில் வழிபட அனுமதிக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. புதுக்கோட்டை கலெக்டர் அருணா, எஸ்.பி., அபிஷேக் குப்தா, திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.,ஜோஷி நிர்மல்குமார் ஆஜராகினர்.அரசு தரப்பு: அரசு புறம்போக்கு நிலம் தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை நிலவுகிறது. கோயில் வழிபாட்டில் பிரச்னை இல்லை. அனைத்து தரப்பினரும் கோயிலில் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது.சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமாதான கூட்டம் நடந்தது.பாதிக்கப்பட்டோருக்கு இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்படும். பாதிக்கப்பட்ட யாரும் இந்நீதிமன்றத்தை நாடவில்லை.வடகாடுவிற்கு சம்பந்தமில்லாத மனுதாரர் மனுதாக்கல் செய்துள்ளார். இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள் வடகாடு போலீசில் மே 5 முதல் மே 7 வரையிலான கண்காணிப்பு கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை