மனைவியுடன் தற்கொலைக்கு முயன்ற காங்கிரஸ் நிர்வாகி கடன் பிரச்னையால் விபரீதம் கடன் பிரச்னையால் விபரீத முடிவு
சென்னை: தொழில் நஷ்டத்தால் ஏற்பட்ட கடன் பிரச்னையால், காங்கிரஸ் நிர்வாகி மனைவியுடன் தற்கொலைக்கு முயற்சி செய்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, போரூர் அடுத்த காரம்பாக்கம், விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் தளபதி பாஸ்கரன், 52; தமிழக காங்., கமிட்டி பொதுச் செயலர். இவரது மனைவி தேன்மொழி, 45. தளபதி பாஸ்கர், போரூர் உள்ளிட்ட இடங்களில் தனியார் நிதி நிறுவனம் மற்றும் மசாலா பொருட்கள் விற்கும் நிறுவனமும் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, தளபதி பாஸ்கர் மற்றும் அவரது மனைவி தேன்மொழி இருவரும், அறையில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த அவரது மகன், இருவரையும் மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், தளபதி பாஸ்கரனுக்கு கடன் பிரச்னை அதிகரித்துள்ளது. கடன் கொடுத்தவர்கள், முதலீடு செய்தோர் அழுத்தம் கொடுத்ததால், மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.