| ADDED : ஜன 04, 2024 09:55 PM
சென்னை:தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அஜோய்குமார் முதல் முறையாக, சென்னை சத்தியமூர்த்தி பவனிற்கு நாளை வருகிறார் என்று கூறப்பட்டது. முதல்வர் ஸ்டாலினை அஜோய்குமார் சந்தித்து, தொகுதி பங்கீடு குறித்து அவரது தலைமையில் ஐவரணி குழு பேச்சு நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நேற்று டில்லியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.அக்கூட்டத்தில், வரும் 14ம்தேதி மணிப்பூரில் ராகுலின் நியாயம் கேட்கும் பாதயாத்திரை துவக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.தமிழக காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை அஜோய்குமார் தலைமையிலான ஐவரணி குழு, முகுல் வாஸ்னிக் தலைமையிலான மத்திய குழுவிடம் தெரிவிக்க வேண்டும்.வேட்பாளர்கள் பெயர் பட்டியலை பரிந்துரைக்க கூடாது என, காங்கிரஸ் தலைவர் கார்கே உத்தரவிட்டுள்ளார். எனவே, ஐவரணி குழு சார்பில், தமிழக காங்கிரசுக்கு, 15 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற பட்டியலை மத்திய குழுவிடம் வழங்கி உள்ளது.பொங்கலுக்கு பின், இரண்டு நாட்கள் அஜோய்குமார் சென்னை, புதுச்சேரியில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.