வழக்கறிஞர்கள் மீதான தொடர் தாக்குதல் பார் கவுன்சில் பரிந்துரை அளிக்க உத்தரவு
சென்னை:வழக்கறிஞர்களுக்கு எதிரான தாக்குதலை தடுக்கவும், நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்தும், உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி., உடன் ஆலோசித்து பரிந்துரைகள் அளிக்கும்படி, பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் பொறுப்பு செயலர் கீதா செந்தில்குமார் தாக்கல் செய்த மனு:வழக்கறிஞர்களுக்கு எதிராக கொடூரமான தாக்குதல் நடக்கிறது. நேற்று முன்தினம், ஓசூரில் நீதிமன்றம் எதிரில் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம், வழக்கறிஞர்களை நிலைகுலையச் செய்துள்ளது. வழக்கறிஞர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பட்டப்பகலில் நடந்த இச்சம்பவத்தை, பொது மக்களும் பார்த்துள்ளனர். இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல; இதுபோன்ற பல சம்பவங்கள் வழக்கறிஞர்களுக்கு நடந்துள்ளன. நடவடிக்கை
பார் கவுன்சில், இதுபோன்ற சம்பவங்களை கண்டித்து தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது. தொடர் தாக்குதல் நடக்கும் போதெல்லாம், நடவடிக்கை எடுக்கக்கோரி, பார் கவுன்சில் தரப்பில் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது. குற்றவாளிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்திய தாக்குதல்களால், வழக்கறிஞர்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது; பாதுகாப்பு குறித்து கவலைப்படுகின்றனர். எனவே, வழக்கறிஞர்களை தாக்கியவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழகம், புதுச்சேரியில் நீதிமன்ற வளாகத்திலும், அதை சுற்றியும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 'மெட்டல் டிடெக்டர்' மற்றும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, ''வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவது, தாக்கப்படுவது தொடர்ந்து நடக்கிறது. தவறு செய்யும் வழக்கறிஞர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையை பார் கவுன்சில் எடுக்கிறது. மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்,'' என்றார். கண்காணிப்பு கேமராக்கள்
இதையடுத்து, 'வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா; விசாரணை துவங்கி விட்டதா' என்று, முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது. 'தனிப்பட்ட காரணங்களுக்காக நேற்றைய சம்பவம் நடந்ததாகவும், ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாது' என்றும் முதல் பெஞ்ச் தெரிவித்தது.வழக்கறிஞர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும், மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாகவும், உள்துறைச் செயலர் மற்றும் டி.ஜி.பி., உடன் ஆலோசனை நடத்தி, பரிந்துரைகள் அளிக்க, பார் கவுன்சிலுக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. விசாரணையை, ஜனவரி 23க்கு தள்ளி வைத்தது.