டிராக்டர் டிரைவருக்கு மாதம் ரூ.5,000 சம்பளம் ஆள் தேடுகிறது கூட்டுறவு துறை
சென்னை:மத்திய அரசின் திட்டத்தில் வாங்கப்பட்ட டிராக்டர்களை இயக்க, மாதம் 5,000 ரூபாய் சம்பளத்தில், 'அவுட்சோர்சிங்' முறையில், டிரைவர்களை நியமிக்கும்படி, கூட்டுறவு சங்கங்களுக்கு, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.கூட்டுறவுத் துறையின் கீழ், 4,456 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அவை மத்திய அரசு திட்டத்தின் கீழ், பல தொழில் செய்யும் பல்நோக்கு சங்கங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்கு, 'நபார்டு' வங்கி குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது. இந்த நிதியில் இதுவரை, 3,100 சங்கங்களில், டிராக்டர் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவை, விவசாயிகளுக்கு குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விடப்படுகின்றன. இதன் வாயிலாக, விவசாயிகள் பயன் பெறுவதுடன், சங்கங்களுக்கும் வருவாய் கிடைக்கிறது. விவசாயிகள், டிராக்டர்களை ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என, வாடகைக்கு எடுக்கின்றனர். அதற்கு ஏற்ப, டிராக்டர் இயக்கும் டிரைவருக்கு, மணிக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து வேலை கிடைக்காததால், டிரைவர்கள் முன் வருவதில்லை. இதனால், டிராக்டர்கள் பயன்படாமல் முடங்கும் நிலை உருவாகிறது. இதை தவிர்க்க, 'மாதம், 5,000 ரூபாய் சம்பளத்தில், டிராக்டர் டிரைவரை நியமிக்க வேண்டும். டிராக்டர் இயக்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும், 100 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்' என, கூட்டுறவு சங்கங்களுக்கு, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.