உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சரியான வாக்காளர் பட்டியல்; கட்சிகளுக்கும் பொறுப்பு உண்டு!

சரியான வாக்காளர் பட்டியல்; கட்சிகளுக்கும் பொறுப்பு உண்டு!

சென்னை: ''தவறில்லா வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பொறுப்பு அரசியல் கட்சியினருக்கும், வாக்காளர்களுக்கும் உள்ளது,'' என, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.எஸ்.கிருஷ்ண மூர்த்தி தெரிவித்தார்.முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி எழுதிய, 'வாக்குச்சீட்டுக்கு அப்பால் ஜனநாயகத்தின் புதிர்கள்' என்ற நுால் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள, தமிழ்நாடு இசைக் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் வீ.ராமசுப்பிரமணியன் நுாலை வெளியிட, முதல் பிரதியை 101 வயது நிரம்பிய மூத்த வாக்காளர் சுவாமிநாதன் என்பவர் பெற்றுக் கொண்டார். பின், சுவாமிநாதன் பேசுகையில்,''தலைமை தேர்தல் கமிஷனராக கிருஷ்ணமூர்த்தி இருந்த போது, பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். உயர் பதவியில் இருந்தபோதும் அனைவரிடமும் எளிமையாக பழகியவர். ஜனநாயகத்தை ஒழுங்குப்படுத்துவதில் அனைத்து தரப்பினரின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து, புத்தகத்தில் தெளிவாக கூறி உள்ளார்,'' என்றார். நிகழ்ச்சியில், டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: சமீபகாலமாக தேர்தல் கமிஷன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது துரதிர்ஷ்டவசமானது. வாக்காளர் பட்டியலில் தவறுகள் இருப்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், ஏன் வாக்காளர் பட்டியலில் தவறு நடக்கிறது, என்பதை கவனிக்க வேண்டும். தவறுகள் நடக்காமல் இருக்க தேர்தல் கமிஷன், ஒவ்வொரு காலக் கட்டங்களிலும் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் ஏற்படும் தவறுகளுக்கு, தேர்தல் கமிஷன் மீது மட்டும் குற்றம் சுமத்த முடியாது. மாறாக, தவறில்லா வாக்காளர் பட்டியல் தயாரிக்க அரசியல் கட்சியினருக்கும், வாக்காளர்களுக்கும் பொறுப்பு உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை