தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடும் ஊழல்: பழனிசாமி
சென்னை : தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவே பிரசார பயணம் செல்வதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, கட்சி தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:
அ.தி.மு.க., தொண்டர்களையும், மக்களையும் நேரில் சந்திக்க, 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற எழுச்சிப் பயணத்தை, 7ல் துவங்குகிறேன். இந்த புரட்சிப் பயணத்தில் தொண்டர்களை எழுச்சிமிக்கவர்களாக மாற்றுவதும், வெற்றிகரமான தமிழகத்தை மீண்டும் உருவாக்குவதும்தான் என் நோக்கம். இது என் தனிப்பட்ட பயணம் அல்ல. மாற்றத்தை நோக்கி நடக்கும் வெற்றிப் பயணம். ஆட்சி மாற்றத்தையும் சமூக முன்னேற்றத்தையும் விரும்பும் ஒவ்வொரு தமிழருக்கான சுற்றுப்பயணம்; தி.மு.க., அரசை வீழ்த்தும் பயணம்.இந்தப் பயணத்தில், தொண்டர்களை மாற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும் முன்னணிக் களவீரனாக, தி.மு.க., அரசின் கொடுமைகளை எதிர்த்து போராடும் சிப்பாயாக இருப்பேன். உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்களோடு உறவாடி நிற்பேன். உங்கள் குறைகளையும் கோரிக்கைகளையும் காது கொடுத்துக் கேட்கும் சேவகனாக இருப்பேன்.ஆட்சியாளர்களுக்கு தமிழக மக்களின் நலன் பற்றி கவலை இல்லை. தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வளம் போன்றவை மட்டுமே லட்சியமாக இருக்கின்றன. ஆட்சியாளர்களிடம் மக்கள் மீதான அலட்சியம் அளவுக்கு மீறி விட்டது. மக்கள் நலனுக்கு எதிரான ஊழல் கோரத் தாண்டவமாடுகிறது. எளியவர்கள் உயிரைத் துச்சமாக நினைக்கும் போக்கு, ஆட்சியாளர் மனத்தில் நிறைந்து விட்டது.அமைதியான, வளமான, நிறைவான தமிழகம் தான் நம் லட்சியம். இதை அடைய, தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்; அ.தி.மு.க., ஆட்சி அமைப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.