புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கரையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராம் 35. இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் நம்பூரணிப்பட்டியை சேர்ந்த நிவேதா என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நிவேதா திருமணமான 8 மாதத்தில் மோகன்ராஜை பிரிந்து சென்றார். அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.சென்னை மணலியில் பெற்றோருடன் வசித்து வரும் நிவேதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே அறந்தாங்கி அருகே வைரிவயல் கிராமத்தை சேர்ந்த கிருத்திகா 26 என்பவருடன் திருமணம் செய்யாமல் மோகன்ராஜ் வாழ்ந்தார். அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.கடந்த 11ம் தேதி தொட்டிலில் துாங்கிக் கொண்டிருந்த குழந்தை வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்தது. இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து மோகன்ராஜ் கிருத்திகா ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தினர். முதல் மனைவியிடம் விவாகரத்து பெறாமல் கிருத்திகாவுடன் சேர்ந்து வாழ்ந்த மோகன்ராஜ் தற்போது கிருத்திகாவுக்கும் குழந்தை பிறந்ததால் நான் சிறைக்கு செல்ல நேரிடும் என்று கூறியுள்ளார்.அதனால் குழந்தையை கொன்று விட முடிவு செய்து மோகன்ராஜ் குழந்தையின் கழுத்தை துண்டால் நெரித்து கொன்றுள்ளார். கிருத்திகா தண்ணீர் தொட்டிக்குள் குழந்தையை போட்டு விட்டு நாடகமாடியது தெரிய வந்தது. குழந்தையை கொன்றதாக கிருத்திகா கொடுத்த வாக்குமூலத்தின்படி நேற்று முன்தினம் இரவு போலீசார் இருவரையும் கைது செய்தனர். பொன்னமராவதியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.தப்பியோடிய கைதி கைது
தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் செல்வசதீஷ் 24. அவரது நண்பரை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி மத்திய சிறையில் இருந்து தூத்துக்குடி நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட செல்வ சதீஷ் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு கழிவறை ஜன்னலை உடைத்து தப்பி சென்றார். இரண்டு தனிப்படைகள் அமைத்து அவரைத் தேடி வந்த நிலையில் நேற்று அவரது அலைபேசி சிக்னலை கொண்டு கோயம்புத்தூர் அருகே போலீசார் கைது செய்தனர். மீண்டும் திருநெல்வேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.ஓட்டல் உரிமையாளர் கொலை
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் ராமசாமி 60. இவர் பிரான்மலை ரோட்டில் ஓட்டல் நடத்தினார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு எஸ்.வையாபுரிபட்டி அருகே புதுப்பட்டி சுப்பிரமணியன் மகன் ராஜசோழன் 32, வந்தார். கடனுக்கு சாப்பாடு பார்சல் தருமாறு கேட்டுள்ளார். ஏற்கனவே பாக்கி இருப்பதால் கடன் தரமுடியாது என ராமசாமி கூறியுள்ளார். இந்த ஆத்திரத்தில் ராமசாமியை ராஜசோழன் கீழே தள்ளிவிட்டார். இதில் தலையில் அடிபட்டு ராமசாமி பலியானார். எஸ்.வி., மங்கலம் போலீசார், ராஜசோழனை கைது செய்தனர்.பெண் வேடமிட்டு தேர்வெழுத முயன்ற நபர் கைது
பஞ்சாபில் காதலிக்காக தேர்வெழுத பெண் வேடமணிந்து சென்று ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.சம்பளம் கொடுக்காததால் லாரியை எரித்த டிரைவர்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் முன் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு டாரஸ் லாரி தீப்படித்து எரிந்தது. இதிலிருந்து பரவிய தீயால் அருகில் நின்ற ஒரு டிப்பர் லாரியும் தீப்படித்து எரிந்தது. ஓமலுார் நங்கவள்ளி தீயணைப்பு நிலைய வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஓமலுார் டி.எஸ்.பி. சங்கீதா தீயில் எரிந்த லாரிகளை பார்வையிட்டார். இது தொடர்பாக தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் டாரஸ் லாரியை அதன் டிரைவரான ரமேஷ் தீ வைத்து எரித்ததை கண்டுபிடித்தனர்.போலீசார் கூறியதாவது: தீயில் எரிந்த டாரஸ் லாரி பவளத்தானுாரை சேர்ந்த சுந்தரம் மனைவி பெயரில் உள்ளது. லாரியை வேலுார் அடுக்கம்பாறையை சேர்ந்த ரமேஷ் 36 ஓட்டி வந்தார். லாரியில் பொருட்களை ஏற்றிக்கொண்டு பல்லடம் சென்றவர் கடந்த 13ம் தேதி பவளத்தானுாரில் விட்டுள்ளார். அதன் பிறகு சொந்த ஊர் செல்ல சுந்தரத்திடம் தன் சம்பளத்தில் முன்பணமாக 19000 ரூபாய் கேட்டுள்ளார்.நேற்று முன்தினம் தருவதாக கூறிய நிலையில் ரமேஷ் சென்றுள்ளார். ஆனால் 1000 ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார். ஆத்திரமடைந்த ரமேஷ் மது குடித்துள்ளார். பவளத்தானுாரில் ஒரு பெட்ரோல் பங்க்கில் நிறுத்தியிருந்த லாரியை எடுத்து வந்து ஸ்டேஷன் முன் நிறுத்தி துணியை சுற்றி லாரி டீசல் டேங்கில் போட்டு எரித்துள்ளார். சுந்தரம் புகாரின்படி ரமேஷை நேற்று கைது செய்தோம். இவ்வாறு கூறினர்.மனைவியை கொன்ற வழக்கில் தலைமறைவான கணவன் கைது
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த பனப்பாக்கம் அருந்ததிபாளையத்தை சேர்ந்தவர் ஏழுமலை, 52; கூலி தொழிலாளி. கடந்த, 2006ல் குடும்ப தகராறில் மனைவி ஆனந்தியை கட்டையால் அடித்து கொலை செய்தார். நெமிலி போலீசார் கைது செய்து, வேலுார் மத்திய சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்தவர், ராணிப்பேட்டை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார்.இந்நிலையில், 2012 டிச., 13ம் தேதி வாய்தாவுக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. பெங்களூரு அருகே சாத்ஹல்லி என்ற இடத்தில், கட்டட மேஸ்திரியாக அவர் பணியாற்றி வருவது தெரிந்தது. அங்கு சென்ற நெமிலி போலீசார், ஏழுமலையை நேற்று முன்தினம் கைது செய்தனர்.பேராசிரியையிடம் 5 சவரன் மோசடி
சேலம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் ஜீவிதா, 36; தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி பேராசிரியை. கடந்த, 2012ல் திருமணமாகி, 2015ல் விவாகரத்தானது. இரண்டாவது திருமணம் தொடர்பாக, செயலி வாயிலாக மாப்பிள்ளை தேடி வந்தார். இதில், அறிமுகமான சென்னை, பல்லாவரம், கிருஷ்ணா நகரை சேர்ந்த ரமேஷ், 36, கடந்த, 9ம் தேதி வீட்டுக்கு வந்துள்ளார்.சுங்கத்துறையில் உதவி கமிஷனராக பணிபுரிவதாக கூறி, திருமணம் செய்ய சம்மதித்துள்ளார். நகை செய்வதற்காக, அளவு எடுக்க வேண்டும் எனக்கூறி, அவரிடம் வளையல், டாலர் செயின், மோதிரம் உள்ளிட்ட ஐந்தரை சவரன் நகையை வாங்கி சென்றுள்ளார். ஆனால், 12ம் தேதிக்கு பின், அவரது மொபைல்போன், 'சுவிட்ச் ஆப்' ஆனது. சென்னை சென்று விசாரித்த போது, ஆசாமி மோசடி செய்தது தெரிந்தது. ஜீவிதா புகாரின்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.காவலாளியை கட்டிப்போட்டு டாஸ்மாக் மது பாட்டில் திருட்டு
அரியலுார் மாவட்டம் கல்லுார் கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. விற்பனையை முடித்து விட்டு சேல்ஸ்மேன் அழகேசன் மற்றும் சத்தியமூர்த்தி நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி சென்றனர்.அப்துல் ரத்தீப் கடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவில் குல்லா அணிந்து வந்த மர்ம நபர்கள் காவலாளி அப்துல் ரத்தீப் வாயில் துணி வைத்து அழுத்தி கை கால்களை கட்டிப் போட்டனர்.தொடர்ந்து கடையில் இருந்த 1.93 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்களை திருடிச் சென்றனர். கடையில் மது விற்று கல்லாவில் இருந்த 2.40 லட்சம் ரூபாய் திருட்டு போகாமல் தப்பியது. கீழப்பழுவூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.ரூ.75.71 லட்சம் தங்கம் சிக்கியது
மலேஷியாவில் இருந்து மூன்று பயணியர் கடத்தி வந்த 75.71 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 30 தங்க நாணயங்களை திருச்சியில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.