உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாவோஸ் மாநாட்டால் பல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க ஆர்வம்

டாவோஸ் மாநாட்டால் பல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க ஆர்வம்

சென்னை:சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டின் வாயிலாக, பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க முன்வந்துள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில், உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாடு, இம்மாதம், 20ம் தேதி துவங்கியது. நான்கு நாட்கள் நடக்கும் மாநாட்டில், தமிழக அரசின் தொழில் துறை அமைச்சர் ராஜா, செயலர் அருண்ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்குழு மாநாட்டின் வாயிலாக, தமிழகம் உற்பத்தி துறையில், முன்னணியில் இருப்பது போல், வருங்காலங்களில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறையில் கவனம் செலுத்த இருப்பதாக, முதலீட்டாளர்களிடம் தெரிவித்தது. தொடர்ந்து, தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தியது. இதன் வாயிலாக, தமிழகத்தில் ஏற்கனவே செயல்படும் ஒரு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், தமிழகத்தில் விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட முன்வந்துள்ளது. மேலும், உணவு பதப்படுத்தும் தொழிலில் உலகளாவிய நிறுவனம் ஒன்று, எப்.எம்.சி.ஜி., எனப்படும், விரைவில் விற்பனையாக கூடிய பொருட்களை தயாரிக்கும் துறையில், முதலீடு செய்ய முன்வந்துள்ளது.இரண்டு முக்கிய நிதி நிறுவனங்கள், ஜி.சி.சி., எனப்படும் உலகளாவிய திறன் மையங்களை அமைக்கவும், இரு மருந்து நிறுவனங்கள் உற்பத்தி ஆலைகளை அமைக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளன. திருவள்ளூரில், 'டிட்கோ' நிறுவனம் அமைக்க உள்ள அறிவுசார் நகரில் தொழில் துவங்க சில நிறுவனங்கள் முன்வந்துள்ளன என, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி