உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 80 வயது மூதாட்டி உயிரிழப்பு: போலீஸ் மீது கொலை வழக்கு பதிய சீமான் வலியுறுத்தல்

80 வயது மூதாட்டி உயிரிழப்பு: போலீஸ் மீது கொலை வழக்கு பதிய சீமான் வலியுறுத்தல்

சென்னை: 80 வயது மூதாட்டியின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு அவர் என்ன குற்றம் செய்தார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை:கன்னியாகுமரி மாவட்டம் மத்திகோடு பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி சூசைமரியாள் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. சிவகங்கை மடப்புரம் அஜித்குமார் விசாரணை படுகொலையால் ஏற்பட்ட அதிர்வுகள் மறைவதற்குள், போலீசார் தாக்கியதில் கன்னியாகுமரியில் மூதாட்டி உயிரிழந்துள்ள கொடும் நிகழ்வு வன்மையான கண்டனத்துக்குரியது. மூதாட்டி சூசைமரியாளை இழந்துவாடும் அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.தமிழ்நாட்டில் அடுத்தடுத்து போலீசாரால் நிகழ்த்தப்படும் விசாரணைப் படுகொலைகளைத் திமுக அரசு தடுக்கத் தவறுவது எதேச்சதிகார கொடுமைகளின் உச்சமாகும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகாரப்பூர்வமாக நிகழ்ந்துள்ள 26 ஆவது விசாரணைப்படுகொலை இதுவாகும். ஆனால், விசாரணைக்காகப் பேரனை கைது செய்த காவல்துறையினரிடம் மன்றாடிய 80 வயது மூதாட்டி சூசைமரியாள், போலீஸ் தாக்குதலில் மரணமடைந்தது குறித்து கன்னியாகுமரி மாவட்ட போலீஸ், அவசர அவசரமாக அடுத்தடுத்து வெளியிட்ட இரண்டு மறுப்புச் செய்திகள் ஐயத்தை அதிகரிக்கவே செய்கிறது. படுகொலை செய்யப்பட்ட மூதாட்டி சூசைமரியாளுக்கு நீதி வேண்டி கருங்கல் போலீஸ் ஸ்டேஷனில், பாதிக்கப்பட்ட குடும்பத்தாரோடு நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் உண்மையை மூடி மறைக்க முயல்வது வெட்கக்கேடானது. தொடர்ச்சியாக போலீஸ், பொதுமக்களை விசாரணை என்ற பெயரில் அடித்துக்கொல்வதும், அதனை திமுக அரசு வேடிக்கைப்பார்ப்பதும்தான் திராவிட மாடலா? உயிரைப் பறிக்கும் அளவிற்கு 80 வயது மூதாட்டி புரிந்த குற்றமென்ன? என்ற கேள்விகளுக்கு எவரிடத்தில் பதில் உண்டு? ஆகவே, தமிழ்நாடு அரசு கன்னியாகுமரி மூதாட்டி சூசை மரியாளைத் தாக்கி அவரது மரணத்திற்குக் காரணமான போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்து நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையென்றால்,மூதாட்டி மரணம் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டுவர நாம் தமிழர் கட்சி தொடர்ப் போராட்டங்களை முன்னெடுத்துப் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூலை 30, 2025 21:13

நான் கேட்பது இது மட்டுமே. தினம் தினம் இப்படி ஏதாவது போலீஸ் அக்கிரமங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. முதல்வர் ஏதாவது இதை பற்றி வாயை திறக்கிறாரா? அடுத்த தேர்தலில் எப்படி வெற்றிபெறுவது என்கிற எண்ணத்திலேயே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார் முதல்வர். அல்லது பாஜகவையும், பிரதமர் மோடியின் மீதும் குற்றச்சாட்டு கூறுவது. மக்கள் மீது ஒரு சிறுதுளியும் அக்கறை இல்லை.


சமீபத்திய செய்தி