விவசாய கல்லுாரி மாணவி மரணம் சந்தேகம் கிளப்புகிறது: மார்க்சிஸ்ட்
சென்னை:'விவசாய கல்லுாரி மாணவி பிரித்தீதேவி சந்தேக மரணம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.அக்கட்சியின் மாநில செயலர் பெ.சண்முகம் அறிக்கை:திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகா, வீரமாணிக்கபுரம் செல்வகுமாரின் மகள் பிரித்தீதேவி, சிவகங்கை மாவட்டம் விசாலன்கோட்டை, சேது பாஸ்கரா விவசாய கல்லுாரியில், பி.எஸ்சி., 'அக்ரி' மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.கடந்த 7ம் தேதி காலை 9:15 மணிக்கு கல்லுாரி விடுதி வார்டன் கோகிலா, பிரித்தீதேவியின் தந்தை செல்வகுமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்து, பிரித்தீதேவி சுயநினைவு இல்லாமல் கிடந்தார். 'சந்திரா என்பவரும், மாணவி தாட்சாயினி என்பவரும் பார்த்து தகவல் தெரிவித்தனர். பின், அவரை காரைக்குடி குளோபல் மருத்துவமனையில் சேர்த்து, மேல் சிகிச்சைக்காக, மதுரை மீனாட்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்' என, தகவல் தெரிவித்துள்ளார்.செல்வகுமார் பதறி அடித்து, மதுரை மீனாட்சி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பிரித்தீ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மறுநாள், 8ம் தேதி பிற்பகல், 2:45 மணிக்கு அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.போலீசார் சொன்ன அடிப்படையில், செல்வக்குமார் புகார் எழுதி கொடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கல்லல் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாடியில் இருந்து மாணவி கீழே விழுந்தது குறித்து, கல்லுாரி நிர்வாகம் ஏன் புகார் கொடுக்கவில்லை; மொட்டை மாடிக்கு செல்லும் கதவு எப்போதும் பூட்டப்பட்டிருக்கும் நிலையில், பிரித்தீதேவி எப்படி கதவை திறந்தார்? அவருக்கு சாவி எப்படி கிடைத்தது; விடுதியில் ஏன், 'சிசிடிவி கேமரா'க்கள் பொருத்தப்படவில்லை; கீழே விழுந்த மாணவியை கல்லுாரி வாகனத்தில் காரைக்குடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றது ஏன்; பிரித்தீ தந்தை செல்வ குமாரிடம் ஏன் போலீசார் கட்டாயப்படுத்தி புகார் எழுதி வாங்கினர்?இந்த சூழலில், மாணவி மரணம் சந்தேகத்திற்கிடமானது என்று கருத அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. போலீஸ் துறையின் அணுகுமுறையும் பாரபட்சமாக உள்ளது. எனவே, இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.