பஸ் ஓட்டும்போது டிரைவர் துாங்கினால் ஒலி எழுப்பும் கருவி 500 பஸ்களில் அமைக்க முடிவு
சென்னை:பஸ் ஓட்டும்போது துாங்கினால், மொபைல் போன் பேசினால் எச்சரிக்கை விடுக்கும் வகையில், அதிநவீன கருவிகள் 500 பஸ்களில் பொருத்தப்பட உள்ளன.இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: நீண்ட துாரம் அரசு பஸ்களில் பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், டி.எம்.எஸ்., எனப்படும் 'டிரைவர் மானிட்டரிங் சிஸ்டம்' என்ற முறை கொண்டு வரப்பட உள்ளது. பிரத்யேக தொழில்நுட்ப கருவியில். 'சிசிடிவி கேமரா' மற்றும் மின்ணணு சாதனங்கள் இடம்பெறும். ஓட்டுநர் சோர்வாக இருந்து துாங்கினால், 'பீப்' சத்ததுடன் எச்சரிக்கை விடுக்கும். இதையடுத்து, ஓட்டுனர்கள் சற்று, 'ரிலாக்ஸ்' ஆகி, டீ குடிப்பது அல்லது சில நிமிடம் நடப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால், துாக்க உணர்வை தடுக்க முடியும். மேலும், மொபைல் போனில் பேசுவது, பயணியரிடம் தேவையற்ற அரட்டையில் ஈடுபடுவது போன்ற ஓட்டுநரின் செயல்களையும், அந்தந்த கிளை அலுவலகங்களில் இருந்தே கண்காணிக்க முடியும்.முதல் கட்டமாக, 500 பஸ்களில், இந்த புதிய முறையை கொண்டு வர, 'டெண்டர்' வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில், இது பயன்பாட்டுக்கு வரும். படிப்படியாக மற்ற பஸ்களில் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.