உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யமுனையின் இரு கரையிலும் 1,000 கூடாரங்கள் சாத் பூஜைக்காக டில்லி அரசு அமைக்கிறது

யமுனையின் இரு கரையிலும் 1,000 கூடாரங்கள் சாத் பூஜைக்காக டில்லி அரசு அமைக்கிறது

புதுடில்லி:வடமாநிலங்களில் ஆண்டு தோறும் தீபாவளிப் பண்டிகைக்கு பின், சூரியனை வழிபடும் சாத் பூஜை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான சாத் பூஜை அக். 25 முதல் 28 வரை மூன்று நாட்கள் கொண்டாடப்படுகின்றன. பீஹார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்படுகின்றன. துாய்மை பணி தலைநகர் டில்லியில் சாத் பூஜைக்காக அரசு சார்பில் யமுனை நதிக்கரையில் கூடாரங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுகின்றன. அதற்கான இடங்களை முதல்வர் ரேகா குப்தா, யமுனை நதியில் படகில் சென்று நேற்று ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் ரேகா குப்தா, நிருபர்களிடம் கூறியதாவது: டில்லிவாசிகள் வரலாற்றுச் சிறப்புமிக்க சாத் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாட, அரசு தரப்பில் யமுனை நதிக்கரையில் அனைத்து வசதிகளும் செய்யப்படும். பல்லாவில் இருந்து ஓக்லா வரை, 1,000 கூடாரங்கள் அமைக்கப்படும். நதிக்கரை முழுதும் துாய்மைப் பணிகள் செய்யப்பட்டு, கொண்டாட்டத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசே செய்து தரும். பிரமாண்டம் யமுனை நதியின் இருபுறமும் கரைகளில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஆற்றிய, 'மன் கி பாத்' உரையில் டில்லியில் இந்த ஆண்டு பிரமாண்டமான சாத் பூஜையை காணலாம் என கூறியிருந்தார். மேலும், சாத் பூஜையை, யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்படும்போது, உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்கள் சாத் பூஜையின் மகத்துவத்தையும் தெய்வீகத்தையும் அனுபவிக்க முடியும். பண்டிகைகள்தான் நம் நாட்டின் கலாசாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. சூரியனை வழிபடும் இந்த பிரமாண்டமான பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர்கள் பர்வேஷ் சாஹிப் சிங், கபில் மிஸ்ரா, லட்சுமி நகர் எம்.எல்.ஏ., அபய் வர்மா மற்றும் அதிகாரிகள் உடன் வந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ