உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு சென்னை, கோவை, திருவள்ளூரில் அதிகம்

டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு சென்னை, கோவை, திருவள்ளூரில் அதிகம்

சென்னை:“தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு, மூன்று வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது,” என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து, சேவை துறைகளுடன் ஆலோசனை கூட்டம், ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் நேற்று நடந்தது. இதில், மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் பேசியதாவது: காய்ச்சல் பாதிப்பு அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக உள்ளது. அதேநேரம், சென்னை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்டங்களில், மலேரியா பாதிப்பு காணப்படுகிறது. திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங் களில், 'டைபாய்டு' காய்ச்சல் அதிகம் காணப்படுகிறது. சென்னை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருப்பத்துார், ஈரோடு, தஞ்சாவூர், கோவை, நாமக்கல் மாவட்டங்களில், கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப் படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், கோவை, கடலுார், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள், டெங்கு காய்ச்சல் பாதிப்புகளில், சிவப்பு மண்டலத்தில் உள்ளன. தமிழகத்தில் இந்தாண்டில், 22 பேர் 'ரேபிஸ்' நோயால் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்கள் எல்லாம் நாய்க்கடிக்கு பின், முறையான சிகிச்சை பெறாமல், அலட்சியமாக இருந்ததால் ஏற்பட்ட விளைவு. இகுறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கும் மாவட்டங்களில், துணை சுகாதார இயக்குநர்கள் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது: வடகிழக்கு பருவ மழையை ஒட்டி, 10,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மழைக் காலங்களில், வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழை நீரில், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகின்றன. இதில், 'ஏடிஸ்' வகை கொசு உற்பத்தியை தடுப்பதற்காக, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழகத்தில், மூன்று வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தாண்டில் இதுவரை, 15,796 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எட்டு பேர் இறந்துள்ளனர். இவர்கள், மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் பாதிப்பு அதிகமாகி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி