| ADDED : டிச 16, 2024 12:30 AM
சென்னை: ''லோக்சபா தேர்தலில், கட்சி சார்பில் 23.5 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது,'' என, அ.தி.மு.க., பொதுக்குழுவில் கட்சி கணக்கை தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், கட்சி பொருளாளர் சீனிவாசனுக்கு பதிலாக, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வரவு - செலவு கணக்கை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:கட்சி சார்பில் வங்கிகளில் உள்ள நிலை வைப்புத் தொகை 160 கோடி ரூபாய்; கட்சி வளர்ச்சி நிதி நிலை வைப்புத் தொகை 107.5 கோடி என, மொத்தம் 267.50 கோடி ரூபாய் உள்ளது. புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் வாயிலாக 1.79 லட்சம்; உறுப்பினர் சீட்டுகள் புதுப்பிப்பு வாயிலாக 9.77 லட்சம்; 2024 லோக்சபா தேர்தல் விருப்ப மனு கட்டண வரவாக 4.81 கோடி; கட்சி வளர்ச்சி நிதியாக 36.6 கோடி ரூபாய் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டு கட்சி பொதுக்குழு கூட்டத்திற்கு 77.3 லட்சம்; கேரள வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக 1 கோடி; பெஞ்சல் புயல் மற்றும் சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்கள், வறுமையில் வாடுபவர்களுக்கு நிவாரண நிதியாக 10 லட்சம்; கட்சியினர் மருத்துவச் செலவிற்கு 2.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு உள்ளன. நட்சத்திர பேச்சாளர்கள், தலைமை அலுவலக பேச்சாளர்கள், கலைக் குழுவினர், சைக்கிள் பிரசாரம் செய்வோருக்கு 38.2 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தலில் கட்சி சார்பில் 23.5 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது. ஜானகி நுாற்றாண்டு விழாவிற்கு 69.4 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. அண்ணா தொழிற்சங்க நிலை வைப்பு நிதியாக, வங்கிகளில் 33.1 கோடி ரூபாய் வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு வட்டியாக 2.32 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ***